பூஸா சிறைக்கைதிகளை விளக்கமறியலுக்கு மாற்றுமாறு கோரிக்கை-

jailபயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விசேட ஏற்பாடுகளின் கீழ் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேர் தம்மை விளக்கமறியலுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவலை குறித்த நால்வரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே மெகசின் மற்றும் அனுராதபுர சிறையில் இருந்து கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பூஸாவுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் வசதிகளற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை மீண்டும் விளக்கமறியல் சிறைகளுக்கு மாற்றவேண்டும் என்று இந்த நால்வரும் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பட்டதாரிகள் சங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடை-

bachelorஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் சங்கம் நடத்துவதற்கு தயாராகவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு கடுவெல நீதிமன்ற நீதிவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் உட்பட, அரச துறையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் இருக்கின்ற போதும், அவற்றுக்கு பட்டதாரிகளை உள்வாங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்படவிருந்தனர். இன்றுமதியம் 12 மணியளவில் குறித்த போராட்டம் நடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலங்கம காவல்துறையினர் இன்று நீதிமன்றில் விளக்கமளித்திருந்ததுடன், பின்னர் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற திசைக்கு நுழைவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுவெல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

கோட்டாபய பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சமூகமளித்தார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கே இவர்கள் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கடற்படை தளபதிகளான ஜெயந்த பெரேரா மற்றும் ஜெயநாத் கொழம்பகே ஆகியயோரும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு மேலதிக செயலாளர் தமயந்தி ஜெயரட்னவும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.