தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உரியமுறையில் பயன்படுத்தி மாணவர்கள் தங்களையும் சமூகத்தையும் வளர்க்க வேண்டும்-த.சித்தார்த்தன் (பா.உ)-(படங்கள் இணைப்பு)
யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லு{ரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஒன்று 26.11.2015 காலை 9மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்டான் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உடுவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. சந்திரகுலகுமார், வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகி|யோரரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், உடுவில் கோட்டத்திலே இத்தகைய ஆய்வுகூடம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது. பெருந்தொகையான நிதிச் செலவில் இந்த ஆய்வுகூடம் திறந்தப்பட்டிருக்கின்றது. இதிலே 60 கணினிகளும் மொழிக்கான, கணிதத்திற்கான ஆய்வுகூடங்களும் இருக்கின்றன. இவைகளை சரியான முறையிலே மாணவர்கள் பயன்படுத்தி தங்களுடைய அறிவினை விருத்திசெய்து கொள்ளவேண்டும். முதல்முதலின் நான் கணினியைக் கண்டது லண்டனுக்குச் சென்றுதான். ஆனால் இன்றைக்கு ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகள்கூட கணினியைப் பார்க்கின்ற, பாவிக்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. இந்தவகையில் இன்றைக்கு தகவல் தொழில்நுட்பவியலின் வளர்ச்சி மிக பெரியளவில் உள்ளது. இதற்கேற்றவாறு கிராமப்புற பாடசாலைகளும்கூட இப்போது மாற்றப்பட்டு வருகின்றன. ஆகவே, இப்படியான தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உருவாக்கியது இலங்கைக் கல்விச் சரித்திரத்திலே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். எனவே, இதை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தி தங்களுடைய கல்வி வளங்களை வளர்ப்பதன்மூலம் தங்களை மாத்திரமல்ல சமூகத்தையும் வளர்ப்பதற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்தார். நன்றியுரையினை உப அதிபர் திரு. மோகன்ராஜ் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவர்களும், பெற்றோர்களும், பெருந்திரளான பொது மக்களும் கலந்துகொண்டார்கள்.