கைதிகளின் விடுதலையில் நல்லெண்ணம் இல்லையெனில் தீர்விலும் நம்பிக்கையிராது-த.சித்தார்த்தன் பாஉ-

Annar kb (18)விட்டுக்கொடுப்புடனான கால அவகாசம் ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எமது தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எனும் சிறிய விடயத்திலேயே தென்னிலங்கையின் நல்லெண்ணம் வெளிப்படாத நிலையில் பாரிய பிரச்சினையான தேசியப் பிரச்சினைக்கான தீர்வை எவ்வாறு முன்வைக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியும் சந்தேகமும் எமக்குள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.

புலிகளுடன் தொடர்புபட்டிருந்த 12 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்டிராத பங்கம் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக இருக்கும் 200க்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்குப் பாதகம் என்று கூறுவதும், இவர்கள் போய் அந்த 12 ஆயிரம் பேரையும் அணிதிரட்டி விடுவார்கள் என்று தென்னிலங்கையில் எதிர்க்கட்சியினர் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது தர்மமாகவும் அமைந்துவிடும் என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அமர்வின்போது இடம்பெற்ற 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இங்கு மேலும் கூறுகையில்,
தமிழ் அரசியல் கைதிகளில் 39 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மேலும் பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிகிறோம். இது உத்தியோகபூர்வமானதாகவும் இல்லாதபோதிலும் இவ்வாறு அறியக்கிடைகிறது.

இன்று அரசியல் கைதிகளாக இருந்து வருவோர் தமது விடுதலை தொடர்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். வாக்கு மூலம் பெற்றுக் கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் இறந்துவிட்ட காரணத்தால் எந்தவிதமான விசாரணைகளும் குற்றச்சாட்டுகளும் இன்றிய நிலையில் புஸ்பகுமார் என்ற ஒருவர் கைதியாக உள்ளார். இவ்வாறுதான் அநேகரின் நிலைமைகள் காணப்படுகின்றன.

முன்னைய ஆட்சிக் காலத்தின்போது புலிகளுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என்று கூறப்பட்டு 12000 பேர் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். அவர்களால் நாட்டுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் பாதகங்களும் ஏற்பட்டிராத நிலையில் அரசியல் கைதிகளாக இருந்து வரும் 200க்கும் அதிகமானோரை விடுதலை செய்வதன் மூலம் நாட்டுக்கு பாதகம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தென்னிலங்கையில் எதிர்த்தரப்பினரே எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர். நல்லிணக்கம் பற்றி இங்கு பெரிதாகப் பேசப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது மிகவும் சிறிய பிரச்சினையாகும். இந்த சிறியதொரு பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கே இயலாவிட்டால் இவர்களை விடுதலை செய்வதற்கே தென்னிலங்கையில் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்படுவதாக இல்லை. மேலும் இது அடிப்படைப் பிரச்சினையாகவும் காணப்பட்டு வருகின்றது. எனவே அவர்களை விடுதலை செய்வது தர்மமாக அமையும்.

எமது தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு கால அவகாசத்தையும் வழங்கி விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. எமது எண்ணங்கள் இவ்வாறிருக்கையில் ஜனாதிபதியும் பிரதமரும் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை கடந்த 30 வருடங்களாக வடக்கு கிழக்கு எந்தவிதமான அபிவிருத்தியையும் கண்டிருக்கவில்லை அங்கு வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அங்கு வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வடக்கு கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்த்து விடமுடியாது.

மாறாக அங்கு பாரியளவிலான முதலீடுகளை செய்தல் வேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வடக்கு கிழக்கு மக்களே ஆவர். ஆகவே அவர்களது எண்ணங்களை ஈடேற்றி அபிலாசைகளை நிறைவேற்றுவதன் மூலம் கடந்த கால துயரங்கள் மறக்கப்படுவதற்கும் மன்னிக்கப் படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்றார்.