Header image alt text

வட மாகாணசபையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை-(படங்கள் இணைப்பு)

03வட மாகாணசபையும். முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்றையதினம் முல்லைத்தீவு மாகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது வடமாகாண விவசாய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இருந்து 39லட்சத்து 40ஆயிரம் ரூபாய் செலவில் பெறப்பட்ட அருவிவெட்டும் இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகருதி இந்த இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைந்த பண்ணையாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினரிடம் இதனைக் கையளித்தார். இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அவர்களும், மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன்(பவன்), துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோரும், ஒருங்கிணைந்த பண்ணையாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்ததுடன், பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். Read more

ஓமந்தையில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் நடாத்தும் 02 வது மாபெரும் இரத்ததான முகாம்.குருதிக்கொடையாளர்களுக்கு அழைப்பு!!

TNYOவவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை (05.12.2015) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற இருக்கின்றது. வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இளைஞர் கழகமானது இலங்கையின் பல பாகங்களில் தமது சமூக, கலை, கலாசார, கல்வி அபிவிருத்திகளில் ஈடுபட்டு இருக்கும் அதேவேளையில் தொடர்ந்து நாடு பூராகவும் 03 வது தடவையாக இரத்ததான முகாமை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read more

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறுவருக்கு இடமாற்றம்-

policeகடமை நிமித்தம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறுவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் எம்.பீ.யு.டி. குணதிலக அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சாதாரண கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் பலங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் எச்.பி.ஜி பிரசன்ன நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியாகவும், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் உதய பண்டார பலங்கொடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டரான ஏ.எஸ்.கே பண்டார சீதாவக்கபுர பிரிவு திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், கோணகங்ஆர உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பீ.எம்.என் சமன்சிறி, ஹட்டன் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.எம் ஆனந்த பண்டார கொழும்பு தெற்கு பிரிவிலிருந்து கோணகங்ஆர பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொழும்பு விமான சேவைகள் இடைநிறுத்தம்-

chennai airportதமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்றுகாலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த மூன்று விமானங்கள் மற்றும் அதிகாலை 01.45 முதல் இரவு 10.15 வரை சென்னையில் இருந்து இலங்கை வரத் தயாராக இருந்த 7 விமான சேவைகளும் இவ்வாறு இரத்தாகியுள்ளன. தமிழகத்தின் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழையால் விமான நிலைய ஓடுபாதையும் மூடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துவருகிறது சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. சில இடங்களில் கனமழை தொடந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

pillaiyanகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்ரர் எனப்படும் எட்வின் கிருஷ்ணாநந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ரங்கசாமி ஆகியோரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்க உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எல்.எம்.அப்துல்லாவிடம் அவர்கள் முன்னிலைப்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த பிள்ளையான், பிரதீப் மாஸ்ரர், கஜன் மாமா ஆகியோர் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகினர். கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சந்தேகத்திலேயே இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ச கைதானால் ஆர்ப்பாட்டம்-

Gotabaya Rajapakse (2)முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பெவிதி ஹண்ட’ இயக்கத்தின் தலைவர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைதுசெய்யும் நிலை ஏற்பட்டால், பௌத்த மகா சங்கத்தினரும், மக்களும் இணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.