சென்னை கொழும்பு விமான சேவைகள் இடைநிறுத்தம்-
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்றுகாலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த மூன்று விமானங்கள் மற்றும் அதிகாலை 01.45 முதல் இரவு 10.15 வரை சென்னையில் இருந்து இலங்கை வரத் தயாராக இருந்த 7 விமான சேவைகளும் இவ்வாறு இரத்தாகியுள்ளன. தமிழகத்தின் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழையால் விமான நிலைய ஓடுபாதையும் மூடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துவருகிறது சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. சில இடங்களில் கனமழை தொடந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்ரர் எனப்படும் எட்வின் கிருஷ்ணாநந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ரங்கசாமி ஆகியோரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்க உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எல்.எம்.அப்துல்லாவிடம் அவர்கள் முன்னிலைப்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த பிள்ளையான், பிரதீப் மாஸ்ரர், கஜன் மாமா ஆகியோர் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகினர். கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சந்தேகத்திலேயே இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்ச கைதானால் ஆர்ப்பாட்டம்-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பெவிதி ஹண்ட’ இயக்கத்தின் தலைவர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைதுசெய்யும் நிலை ஏற்பட்டால், பௌத்த மகா சங்கத்தினரும், மக்களும் இணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.