தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்திற்கு அனுமதி-
தகவல் அறியும் உரிமை தொடர்பான வரைபுச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச ஊழியர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை 10 வருடங்களுக்கு ஒரு முறையே பெற முடியும் எனவும் கூறிய பிரதமர் இதனை இரண்டு முறை மட்டுமே பெரும் வகையில் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஊடகத்துறை அமைச்சர், கயந்த கருணாதிலக்க சமர்ப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசராக சித்ரசிறி-
உயர்நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக கங்கானிதந்திரி சித்ரசிறி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்றுகாலை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நலின் ஜயலத் பெரேரா இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணைக்குழுவில் பிரசன்னம்-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். றக்னலங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். ஆவர் இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
சஜின்வாஸ் குணவர்த்தன வெளிநாடு செல்ல தடை-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் குறித்த கோரிக்கையை இன்று நிராகரித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மே 11ம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின் சஜின் வாஸ் கடந்த செப்டம்பர் 23ம்திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் கடந்த ஒக்டோபர் 20ம் திகதி மருத்துவத் தேவைக்காக வெளிநாடு செல்ல அவருக்கு நீதிமன்றம் ஐந்து நாட்கள் அனுமதியளித்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.