தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இரகசிய முகாம்களில்லை-அமைச்சர் மங்கள-
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தடுப்பு முகாம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பில் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்தமை தொடர்பிலான சம்பவங்கள் 14 எமக்கு பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. பயங்கரவாத தடுப்பு சட்டம் மிகவும் மோசமான சட்டமென ஐக்கிய நாடுகள் சபையில் கூறப்பட்டிருந்தது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறப்பட்டது. அவர்கள் எந்த விடயத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை நீக்கி அவர்களை விடுவிக்க வேண்டும்.
இதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு பதிலளித்தார்;,
சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளுக்கான காரணத்தைக் கண்டறியும் சந்தரப்பம் கிடைத்துள்ளது. இரகசிய முகாம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை. இதேபோன்று பிரதமர் பலமுறை சர்வதேசத்திற்கு இது தொடர்பில் கூறியிருந்தார். ஆனால், இவ்வாறான முகாம்கள் தொடர்பில் தகவல்கள் காணப்படுமாயின் அவற்றை எமக்குத் தாருங்கள். அது தொடர்பில் சுயாதீனமாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.