இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை இணையத்தில் வழங்க ஏற்பாடு-

briberyசரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தெளிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விஷேடமாக வடக்கிலுள்ள மக்கள் இலஞ்சம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயக்கம் காட்டுவதாக கூறிய ஆணைக்குழு, அவர்கள் இது குறித்து சரியான புரிந்துணர்வின்றி செயற்படுவதாக கூறியுள்ளது. மேலும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இணையத்தின் மூலம் முறைப்பாடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது

இலஞ்ச வழக்கு: ஒருவருக்கு பிணை மற்றவர் விளக்கமறியலில்-

courts25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நாரஹேன்பிட பொலிஸ் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சந்தேகநபரை 15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்க, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாரஹேன்பிட முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 11ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்றையதினம் குறித்த வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமரப்பிக்க வேண்டும் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்குத் தாக்கல் செய்யாமல் இருக்க வைத்தியர் ஒருவரிடம் 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் பெற்றதாக இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிலாவெளியில் கரையொதுங்கிய ஆணின் சடலம்-

dead.bodyதிருகோணமலை நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சடலம் நேற்று முற்பகல் கரையொதுங்கியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், எனினும் இதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாதெனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். நிலாவெளி பகுதியில் கரையொதுங்கிய சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, திருகோணமலை கடற்பரப்பில் சுமார் 20 மைல் தூரத்தில் ஆறு சடலங்கள் மிதப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று கடற்படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். திருகோணமலை துறைமுகப் பொலிஸார் வழங்கிய தகவலின்படி இரு படகுகள் குறித்த பகுதிக்கு சென்றதாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

யாழில் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் புதுப்பிப்பு-

909யாழில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் நோக்கிலும் மீண்டும் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.வூட்லர் தலைமையில் இக்கண்காணிப்பு நிலையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தின் இதற்கு முன்னரும் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையின் பின்னரான வன்முறைச் சம்பவங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் இக்கண்காணிப்பு நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்தும் யாழில் பல குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்ற நிலையில், அவற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் பொலிஸ் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் நால்வர் காயம்-

dfdfகிளிநொச்சி இரணைமடு சந்தியில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து நோயாளர்களை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்ற இராணுவ அம்புலன்ஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்புலன்ஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.