பல்கலை அனுமதிக்கு முன் மாணவர்களுக்கு இரத்த பரிசோதனை-

rajithaபல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களையும் இரத்தப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த, எச்.ஐ.வி உள்ளிட்ட அனைத்து நோய்களையும் இனம்காண்பதே இதன் நோக்கம் என சுட்டிக்காட்டினார். தற்போது நாடு பூராகவும் 9வயதுக்கும் குறைவான எச்.ஐ.வி பாதிப்புள்ளவர்கள் 71பேர் இனம்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 20 பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாகவும், இதனை தவிர்க்க உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் எனவும், இதனால் எச்.ஐ.வி தவிர்த்து ஏனைய நோய்கள் தொடர்பிலும் அடையாளம் காண முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இணையும் முன் அனைத்து மாணவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் அவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எது எவ்வாறிருப்பினும் இந்த நடவடிக்கை எவ்வாறு, எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து ராஜித்த எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனை ஒரு யோசனையாகவே அவர் முன்வைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.