அவன்ற் கார்ட் தலைவருக்கு அழைப்பு, பொன்சேகா ஆணைக்குழுவில் முறைப்பாடு-
அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மூவர் முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்யவே நிஸ்ஸங்க இன்றுபகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்றுபகல் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அவன்ட் காட் நிறுவனத் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சரத் பொன் சேகாவுக்கு நிதி வழங்கியதாக தெரிவித்திருந்த நிலையில், பொன்சேகா அதை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு சென்னை விமான சேவை மீள ஆரம்பம்-
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்று பிற்பகல் 1.45 அளவில் யு.எல்.127 எனும் விமானம் சென்னை நோக்கி பயணித்துள்ளது. இதேவேளை யு.எல் 128 என்ற விமானம் இன்று பிற்பகல் 4.05 அளவில் சென்னையில் இருந்து இலங்கை நோக்கி பயணிக்குமெனவும் பிற்பகல் 5.25 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் எனவும் ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இதேவேளை புதுடில்லியில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ஸ்ரீ லங்கன் வானூர்தி சேவையின் விசேட வானூர்தி ஒன்று இன்று முற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளது. சுமார் 305 பேர் புதுடில்லியில் தங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நேற்று சென்னையில் இருந்தும் பல இலங்கை பயணிகள் விசேட வானூர்தி மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சிறுவர் இல்லத்து சிறுவனைக் காணவில்லை, கோட்டையில் குழந்தை மீட்பு-
வவனியா சிறுவர் இல்லமொன்றில் இருந்த சிறுவனொருவனைக் காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு நிலையத்தால் சேர்க்கப்பட்ட சிறுவனே, கடந்த 5ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை ஒன்றரை வயதான ஆண் குழந்தையொன்று கோட்டை பகுதியின் வீதியோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்தக் குழந்தை சிறுவர் இல்லமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார் மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட குழந்தை பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமலை கடற்பரப்பில் சடலங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுப்பு-
திருகோணமலை கடற்பரப்பில் சடலங்கள் சில மிதப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மூன்று டோரா படகுகளும் திருமலை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். திருமலையிலிருந்து 20 கடல் மைல் தூரத்தில் ஆறு சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன இதேவேளை இது வரையில் எவ்வித சடலமும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. கண்டி பகுதியில் தொடரும் சீரற்ற காலனிலை காரணமாக இரங்கல் நகரில் இருந்து கிரண்டியல்ல கீழ் பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் காணப்படும் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழந்துள்ளது. இதன் காரணமாக இந்த வீதியூடான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடரும் மழையுடனான காலனிலையால் பாலத்தின் ஏனைய பகுதிகளில் அதிக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் ஆனந்தபுரம் கிழக்கு பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.