இலங்கை அகதிகளுக்காக 50,000 வீடுகள்-

indian schemeஇலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு இத் தகவலை வெளியிட்டுள்ளார். “இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் சேதமடைந்த வீடுகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் தற்போது 101368 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 ஏக்கர் நிலங்களை விடுவித்துள்ளது” என்று மத்திய மந்திரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்தில் 15 இராணுவத்தினர் உட்பட 36பேர் காயம்-

accidentபயாகல பொலிஸ் பிரிவின் கடுகுருந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 04.10 அளவில் புதுக்கடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று கட்டுகுருந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, கத்மணவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் அதனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 36பேர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 இராணுவத்தினர் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் வங்கி இலங்கை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-

9892016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அரச வங்கிகளுக்கு அநீதிகள் ஏற்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியின் சேவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியலாம் ஹட்டன் நகரில் மக்கள் வங்கி கிளைக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வரவு செலவு திட்டத்தில் அரச வங்கி சேவையாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். “அரச ஊழியர்களின் ஓய்வூதியக் கத்தரிப்பை நிறுத்து” ஈ.பி.எவ், ஈ.ரி.எவ் நிதிகள் ஆபத்தில் – உறுப்பினர்களே விழித்திடுங்கள்”, “வங்கிகளிடம் இருந்து அகற்றப்படும் லீசிங் மற்றும் அடகுக் கடன்கள்”, “ஏற்றுமதி – இறக்குமதிச் செயற்பாட்டை வங்கிகளிடமிருந்து அகற்றுவதால் அனைத்து வங்கிகளும் ஆபத்தில்” போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர். மேலும் இவ்வாறான வங்கிச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் நலன்கள் தொடர்பாக கருத்திற்கொண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும். அவ்வாறு திருத்தம் கொண்டு வரப்படாவிடில் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு கோட்டை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ். சிறையில் கைதி உண்ணாவிரதம்-

jail.......யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரே நேற்று மாலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தம்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது பொலிஸார் சமூகமளிக்காமையால் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக தெரிவித்து குறித்த நபர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த கைதி கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளருக்கு பிணை-

courtsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரான சம்பக் கருணாரத்னவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகேயால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத் திணைக்களங்கள் பலவற்றிலிருந்து, மோசடியாக ஊதியங்களைப் பெற்றதாகவும், பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டியே, இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சந்தேகநபரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. குறித்த சந்தேகநபரைத் தடுத்துவைக்கத் தேவையான போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, அவரைப் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார். இவ்வழக்கு, மார்ச் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.