சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பிற்கெதிராக மறியல் போராட்டம்-

fdfdfமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தின் தர்மபுரம் கிராமத்திலுள்ள தமது காணியை பொலிசாரின் உதவியோடு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அத்துமீறி; வேலி அடைப்பதாகவும் இக்காணிக்கு இவ்வாறு வேலி அடைக்கப்படுவதை உடனடியாக தடுத்துநிறுத்துமாறும் கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று ஒன்றுகூடி அக்கிராம மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். 400 ஏக்கருடைய இக்காணியில் 60 ஏக்கருக்கு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலரினால் அத்துமீறி வேலி அடைக்கப்பட்டு வருவருடன், இதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இக்காணி தமிழருக்குச் சொந்தமானதென்பதுடன், இக்காணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அம்மக்கள் கூறினர். எனவே, தமது காணி பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலரினால் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்குமாறு இம்மக்கள் கோரியுள்ளனர். இதன்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உங்களின் காணிக்குரிய ஆதாரங்கள் இருப்பின், நீதிமன்றத்துக்குச் சென்று அதை நிரூபிக்குமாறும் அல்லது காணிக்குரிய சொந்தக்காரார்கள் இருப்பின் அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.