சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை-பிரதமர் ரணில்-

ranilஇந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் விஷேட உரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். பொறுப்பு மிக்க தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை கூறி, தமது உறுப்பினர்களையும் மக்களையும் ஏமாற்றுவதைக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் பிரிதொரு பெயரில் இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும், இதன்மூலம் வேலையற்ற இந்திய இளைஞர்களுக்கு இலங்கையில் பணிபுரிய வாய்ப்புகள் கிட்டவுள்ளதாகவும், இது இலங்கையிலுள்ளவர்களின் வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை பாதிக்கும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டிருந்தது என ரணில் சுட்டிக்காட்டினார். இதேவேளை கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தை மாற்ற பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறங்கியபோது, பல்வேறு தொழிற் சங்கங்கள், தமது தொழில் வாய்ப்புக்கள் மட்டுமன்றி உயிரையும் பணையம் வைத்து எம்முடன் கைகோர்த்தனர் என கூறிய அவர், இதன்போது பல வைத்தியர்களும் எம்முடன் இருந்தனர் எனவும் தெரிவித்தார். எனினும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர் ஆசனங்களில் உள்ள சிலர் ஜனவரி 8ம் திகதி புரட்சியுடன் இணைந்திருக்கவில்லை. அவர்கள் ராஜபக்ஷ ஆட்சியை பாதுகாக்கவே இணைந்திருந்தனர். இதனை முழு நாடே அறிந்திருந்தது. அவ்வாறு இருக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் பொய்கூறி தமது உறுப்பினர்களையும், நாட்டையும் ஏமாற்ற முயற்சிப்பது, அவர்கள் இன்னும் ராஜபக்ஷ ஆட்சியின் அடிமைகளாக இருப்பதாலேயே என தெளிவாகிறது. இவர்கள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்க்கவில்லை. தொழிலுக்காக இந்தியர்களை அனுமதிக்கும் பகுதியை நீக்கக் கோரவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இது இவ்வாறிருக்க சீபா ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறி நாட்டை நெருக்கடிக்குள் தள்ள அவர்கள் முற்படுகின்றனர். சீபா ஒப்பந்தத்திற்கு பதிலாக பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தீர்மானித்துள்ளோம் என பிரதமர் தனதுரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.