மொரோக்கோ சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கு வவுனியா இளைஞர் திரு சு.காண்டீபன் இலங்கை பிரதிநிதியாக தெரிவு-

kandeepanமொரோக்கோவில் எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை, நூறு நாடுகளின் நூறு பிரதிநிதிகள் பங்குபற்றும் இளைஞர் மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று வவுனியா மாவட்ட சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் பங்குபற்றவுள்ளார்.

“முரண்பாடுகளை களைதலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தலும்” எனும் தொனிப்பொருளில் இவ் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளதுடன், எதிர்கால தலைமுறைக்கான ஓர் நல்ல சூழலை ஏற்படுத்த “இளைஞர்கள் மத்தியில் பொதுவான ஒரு சொல்” எனும் செயற்றிட்ட மாநாட்டில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும், விஞ்ஞானமானி பட்டதாரியுமான திரு.சு.காண்டீபன் பங்குபற்றவுள்ளதுடன், இவர் வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் ஊடக மற்றும் பொதுத் தொடர்புகளுக்கான உதவி மாவட்ட ஆணையாளராகவும், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவராகவும், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு சு.காண்டீபன் அவர்களின் முன்னைய வரலாற்று சாதனைகளின் பதிவுகளையும் கருத்தில் கொள்ளும்போது 2005ஆம் ஆண்டு, நேபாளம் காத்மண்டில் நடைபெற்ற சாரண சார்க் நட்புறவு பாசறையில், இலங்கை குழாமில் பாசறைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2007 ஆம் ஆண்டு சாரணர் அமைப்பின் உயர் விருதான ஜனாதிபதி விருதினை முதன் முதலாக விபுலானந்தா கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்ததுடன், 2013 ஆம் ஆண்டு திரி சாரணர் உயர் விருதான, சாரணர் அமைப்பின் ஸ்தாபகரின் நாமம் கொண்ட பேடன் பவல் விருதினை பெற்று வவுனியா மாவட்டத்தின் சாரணர் வரலாற்றின் முதல் விருதாக பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் சர்வதேச இளைஞர் மாநாட்டில், இளைஞர்கள் சமூகத்தில் உரிய துறைகளில் சவால்களை எதிர் கொண்டு, வெற்றிப் பாதையில் முன்னேற்றமடைய மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் அதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாடுகளின் தன்மையில் கலந்துரையாடவும், முரண்பாடுகளை களைந்து எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இளைஞர்களின் உணர்வுகளும், தவறாகப் புரிந்து கொள்ளலும், இளைஞர்களின் அடையாள தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மை, முரண்பாட்டு மாற்றம் மற்றும் சக வாழ்வு ஆகிய தலைப்புகளில் இலங்கை பிரதிநிதியான திரு சு.காண்டீபன் உரையாற்றவும், திட்ட முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளைஞர் மாநாட்டை தொடர்ந்து, மொராக்கோ சாரணர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் சாரணர்களின் சந்திப்பு மற்றும் தீப்பாசறை, சுற்றுலா போன்றவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு சு.காண்டீபன் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயம், வவுனியா விபுலானந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன் என்பதுடன் கொடிய யுத்த வடுக்களை சிறு வயதில் சுமந்த ஓர் இளைஞன், இன்று இலங்கையின் பிரதிநிதியாக மொராக்கோவில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(திரு. சு. காண்டீபன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்)