யாழில் கைதி உண்ணாவிரதம், குற்றப்புலனாய்வினருக்கு அழைப்பு-
யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த கைதி தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சிறைச்சாலைகள் தலைமையகத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். இதன் காரணமாக குறித்த கைதி கடந்த இரண்டு நாட்களாக யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கும் அறிவிக்கப்பட்டள்ளது. யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட குறித்த கைதி கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டதாகவும் துஷார உபுல் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரே கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த கைதி கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், குறித்த நபர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் தொடர்ந்தும் வழக்கு தவணை இடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.