வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்புக்கு உலக வங்கி 20 மில்லியன் நிதியுதவி-

world bankவடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட அவற்றுடன் இணைந்த பிரதேசங்களுக்கான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு, மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் உலக வங்கியினால் இந்த நோக்கங்களுக்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டிருந்ததாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட 101 பிராந்திய நிர்வாக சபைகளுக்குட்பட்ட பாலங்கள், வீதிகள், சிறியளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள், மின்சார விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு-

jaffnaபயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ். மாவட்ட சர்வமத குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கையெழுத்துப் போராட்டம் நல்லூரிலுள்ள நல்லை ஆதினத்தில் இன்றையதினம் காலையில் ஆரம்பமானது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ். கே.கே.எஸ். வீதியிலுள்ள பள்ளிவாசலிலும் யாழ். புனித யாகப்பர் தேவாலய முன்றலிலும் இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழக அகதி முகாம் வீடுகளை சீரமைக்க நடவடிக்கை-

refugeesதமிழகத்திலுள்ள ஏழு இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள வீடுகளை சீரமைக்க ரூ.2.56 கோடியில் (இந்திய ரூபாய்) பொதுப்பணித்துறை மூலம் திட்ட மதிப்பீடு தயாரித்து, அகதிகள் மறுவாழ்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, மல்லாங்கிணர், அனுப்பங்குளம், செவலூர், கண்டியாபுரம், மொட்டமலை ஆகிய ஏழு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. 1,076 குடும்பங்களைச் சேர்ந்த 3,446 பேர் இங்கு வசிக்கின்றனர். இம் முகாம்களில் பழுதடைந்த வீடுகளின் மேற்கூரை, பக்கவாட்டுச்சுவர், தரைதளம், குளியலறை மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றை சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு, ஷரூ. 2 கோடியே 56 இலட்சத்திற்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு கலெக்டர் மூலம் அகதிகள் மறுவாழ்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்நிதி ஒதுக்கப்பட்டதும் விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என, மாவட்ட அகதிகள் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர் பெயர்ப்பட்டியல் டிசம்பர் 30க்கு முன் வெளியிடப்படும்-

votes2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் டிசம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தப் பட்டியலைத் தயாரிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தொடர்பில் 71,000 முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, இவற்றை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாமை மற்றும் உள்ளடக்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்த எதிர்ப்பு என, அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது

மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்-

mannarசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.30 மணியளவில் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. இதன்போது காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களது பிள்ளைகள உட்பட பலர் கலந்து கொண்டனர்.

HNDA மாணவர்கள்மீது தாக்குதல், பொலிஸ் பரிசோதகர் இடைநிறுத்தம்-

arpattamகணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கொழும்பு, கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.