முன்னைய நடைமுறையின் பிரகாரமே மாகாண சபைகளுக்கு நிதி-

mahipalaமாகாண சபைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை முன்னைய நடைமுறையின் பிரகாரமே வழங்குவதற்கு ஜனாதிபதி இன்று இணங்கியதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றம் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக மாகாண சபைகளுக்கான நிதி வழங்கல் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து மாகாண சபைகளின் முதலமைச்சர்களால் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்தே ஜனாதிபதி முன்னைய நடைமுறைக்கு இணங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டிற்கான நிதியொதுக்கீடுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக மேற்கொள்வதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்ததாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். இது குறித்து நிதியமைச்சர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண முதலமைச்சர்கள் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக முதலமைச்சர் மஹிபால ஹேரத் கூறினார். இதற்கமைய, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினூடாக மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டை மேற்கொண்டு திறைசேரியிடமிருந்து நேரடியாகவே நிதியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.