சித்திரை புத்தாண்டிற்கு முன் உள்ளுராட்சி தேர்தல்-பிரதமர்-

localஉள்ளுராட்சி தேர்தலை எதிர்வரும் சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் நடத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படல் வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரமதர் இதனை தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பில் இதுவரையில் சுமார் 2ஆயிரம் முறையீடுகள் கிடைக்கப்பெற்றள்ளன. இந்த முறைப்பாடுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜோன்ஸ்டன் மற்றும் கப்ரால் ஆகியோரை ஆஜராகுமாறு அழைப்பு-

jonstanமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாபொல லொட்டரியை மலேசியப் பிரஜை ஒருவருக்கு வழங்கியதில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளார். கொள்முதல் வழிமுறை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அஜித் நிவாட் கப்ரால் பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது-

arrestபோலியான கடவுச்சீட்டுக்களுடன் இலங்கையர்கள் இருவர் மற்றும் இந்திய பிரஜை ஒருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. தாய்லாந்தின் பெங்கொக் நகர் நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்னர். ஐகதான மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைத்துள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் ஆரம்பம்-

missing personsகாணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் இந்த அமர்வில், நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றார்கள். நல்லூர் பிரதேச செயலகத்தில் 235 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. யாழப்பாணம் பிரதேசம் மற்றும் பருத்தித்துறை, தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குமார் குணரட்னத்துக்கு மீண்டும் விளக்கமறியல்-

kumar gunaratnamகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் குணரட்னமை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-

courtsபுலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் இருவரையும் ஜனவரி 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வணாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா இராணுவ கஜபா படையணியின் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேர் பயணித்த ஜீப்பின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவர்களை படுகொலைச்செய்தனர் என்று அவ்விருவர் மீதும் அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. வில்பத்து தேசிய வனாந்தரத்தில் வைத்தே அவ்விருவரும் இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கை ஜனவரி 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளில் 7975 கைதிகள் உள்ளனர்-அமைச்சர் சுவாமிநாதன்-

jailநாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 7975 கைதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுள் கொலைக்குற்றம் சாட்பட்டவர்கள் 1211 பேரும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 2995பேரும் மதகுருமார்கள் 17 பேரும் மற்றும் தாய்மார்கள் சிறையிலுள்ளமை காரணமாக குழந்தைகள் 58பேரும் சிறைச்சாலையில் உள்ளதாக கூறப்படுகிறது. புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து கலாச்சார மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அகதி அந்தஸ்து விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய உத்தரவு-

canadaகனடாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயகண்ணன் கந்தசாமி என்ற 27 வயதான குறித்த இலங்கையர் கடந்த 2010ம் ஆண்டு குடும்பத்தாருடன் கனடாவுக்கு அகதியாக சென்றுள்ளார். எனினும் அவரது அகதி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதற்கு எதிராக முறைபாடு செய்யப்பட்டிருந்த போதும், அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்நிலையில் தாம் நாடுகடத்தப்பட்டால், இலங்கையில் தமக்கு உயிராபத்து ஏற்படும் என்று கூறி அவரால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.