நோர்வே வெளிநாட்டு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

norwayநோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே, விஜயமொன்றை மேற்கொண்டு, அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனவரி 2016ன் முதல்வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ள அமைச்சர், வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் உள்ளடங்கலாக, இலங்கைக்கும் நோர்வேக்குமிடையிலான கூட்டுறவுக்கான வாய்ப்புகள் குறித்து, உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை வர்த்தகக் கழகம், இலங்கையிலுள்ள நோர்வேத் தூதரகமும் இலங்கை வர்த்தகக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள கலந்துரையாடலொன்றில், ஜனவரி 7ஆம் திகதி அவர் பங்குகொள்வார் எனத் தெரிவித்துள்ளது. இலங்கையில் முதலீடு செய்வதற்கு, நோர்வேயைச் சேர்ந்தோரின் ஆர்வம் அதிகரித்துள்ள பின்னணியிலேயே, அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

காணாமற்போனோர்க்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை-

missingஇழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கோரி வருவதாக இன்றைய தினம் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க வருகை தந்திருந்த தாயொருவர் குறிப்பிட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலகத்தை சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் தமது உறவுகளை தொலைத்த பலரும் கலந்து கொண்டு சாட்சியமளித்து வருகின்றனர். இதன்போது தனது காணாமல்போன மகன் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த தாயார், பார்வையிழந்த தனது கணவன் மற்றும் வலது குறைந்த தனது மற்றொரு மகனுடன் தாம் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வசித்து வருவதாக தனது துயரை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதன்போது அவரது காணாமல்போன மகன் தொடர்பில் தாம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்த அதிகாரிகள், இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொள்ளுமாறு தாயாரிடம் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், சொந்த வீடின்றி தவிக்கும் தனக்கு காணி வழங்கி அங்கு வீடமைத்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் அந்த தாயார் குறிப்பிட்டார். மேலும். சாட்சியம் அளித்தவர்கள் தொடர்பான விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு சார்பில் குழுக்கள். காணாமல் போனோரது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம உறுதியளித்துள்ளார்.