இலங்கையின் தேசியத் தொழிற்சங்க ஒன்றியம் பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக இலங்கையின் தேசியத் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட சில பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரம்இ தபால்இ பொதுபோக்குவரத்து உள்ளிட்ட பல துறையினர் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர் நடவடிக்கையாக வரவு செலவுத் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதாக ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.மேலும் இலங்கையில் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் நிறுத்தப்படாது என்றும் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது அரசாங்கம் ஓய்வூதியத்தை இரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாகக் கூறி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்கஇ இலங்கையில் வயது முதிர்ந்தோரின் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால்இ எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் பெரும் சவால்ககளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
‘1961ஆம் ஆண்டு ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 83 மில்லின் ரூபாயாக இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு இந்த தொகை 99,961 மில்லியனாக அதிகரித்தது. 2050ஆம் ஆண்டு இந்த தொகை நான்கு மடங்காக உயரவுள்ளது. எனவே ஓய்வூதியத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருந்தாலும், ஓய்வூதியம் முழுமையாக இரத்துச் செய்யப்படமாட்டாது’, என்றார் ரணில் விக்ரமசிங்க.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க தமக்குச் சாதகமான உறுதியை தந்திருப்பதால் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிடுவதாக தேசிய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
தாங்கள் அதிகாரபூர்வமாக 12 கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்துவதோடு சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை உடனடியாகத் தீர்க்கவும் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதால் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தாங்கள் கைவிட தீர்மானித்துள்ளதாகவும் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.