சென்னை பல்கலை. கருத்தரங்கில் (இலங்கைப் பூர்வீக) மாணவர் மீது ‘தாக்குதல்’ 

universityசென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த கருத்தரங்கு ஒன்றின்போது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்கை ஆபத்து மற்றும் பேரிடர் ஆய்வு மையத்தின் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கோபால்ஜி மாளவியா, மாநில தேர்தல் ஆணையத்தின் செயலரான ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.இந்தக் கருத்தரங்கு நடந்துகொண்டிருந்தபோது, அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பிரிவு-சர்வதேச விவகாரங்கள் துறையில் இரண்டாம் ஆண்டில் படித்துவரும் ஜோனாஸ் ஆண்டன் புலேந்திரராசா என்ற மாணவர் கேள்விகளை எழுப்ப முற்பட்டபோது, சில பேராசிரியர்கள் அவரை கருத்தரங்கை விட்டு வெளியேற்றியதாகவும், பிறகு ஆசிரியரல்லாத பணியாளர்களை வைத்துத் தாக்கியதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த மாணவர் பிரான்ஸ் நாட்டுக் குடிமகன் என்றும், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய மாணவர் ஜோனாஸ், ஜோதி நிர்மலா சாமி பேசும்போது, அரசுத் தரப்பை மட்டுமே சொல்கிறீர்களே- மக்கள் கருத்து என்னவென்று தெரியுமா எனக் கேட்டபோது, சிலரால் வெளியேற்றப்பட்டு தான் தாக்கப்பட்டதாகக் கூறினார்.
ஆனால், அந்த மாணவர் தாக்கப்படவில்லையென்றும் தொடர்ந்து கருத்தரங்கிற்கு தொந்தரவளித்துவந்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்றும் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் பிபிசியிடம் கூறினார்.
அந்த மாணவர், அரைக்கால் சட்டையும் டி – ஷர்டும் அணிந்துவந்ததால், அவர் மாணவரல்லாதவர் என முன்னதாகக் கருதப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பேரழிவு நிர்வாகம் குறித்த கருத்தரங்கிற்கு தேர்தல் ஆணைய அதிகாரி அழைக்கப்பட்டது அந்தத் துறையின் முடிவு என்றும் திருமகன் கூறினார்.
இந்தச் சம்பவத்தையடுத்து துணை வேந்தர் அலுவலகத்தின் முன்பாகக் கூடிய மாணவர்கள், மாணவரைத் தாக்கிய பல்கலைக்கழக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தப் புகார் பதிவுசெய்யப்படவில்லையென மாணவர்கள் தெரிவிக்கின்றனர்