தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள்

SL thamilarதமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இலங்கை அகதிகளின் சில முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி முகாமில் 200க்கும் அதிகமான வீடுகள் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் சிவகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்தவந்த இந்த முகாம் வீடுகள், மழை வெள்ளத்தில் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அகதிகளுக்கு அரசு வழங்கிவருகின்ற உதவித் தொகைகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இந்த வீடுகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்துவந்ததாகவும் சிவகுமார் கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முகாம் மக்களுக்கு தொண்டுநிறுவனங்களும் சில கட்சிகளும் சிறு உதவிகளை வழங்கிவருவதாகவும் அரசிடமிருந்து உதவிகள் இன்னும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு உணவு உதவிகள் தேவைப்படுவதாக அங்கு கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் இலங்கையின் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த கரோலின் சில்வியா தெரித்தார்.
தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள், பெரும்பாலும் கூலித்தொழில்களையே நம்பியிருப்பதால் அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் வருமானத்தை இழந்திருப்பதாக ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில முகாம்களே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்துவருவதாகவும் அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.