தமிழ் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
 
tamilprisonersthirddayfastதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, அவர்கள் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, இந்தக் கைதிகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ் கைதிகளுக்கு, இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை எம் சத்திவேல் தெரிவித்தார்.

சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காகவே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, போலிசார் தம்மிடம் பெற்றுக்கொண்ட ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்தி, இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் இரண்டு பேர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.

இவர்களது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த, தமிழ் அரசியல் கைதிகள் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுளளார்.

கிராமிய இராஜ்ஜியத் திட்டத்திற்கு வடக்கு முதல்வர் எதிர்ப்பு

vikiஇலங்கை அரசாங்கத்தின் கிராமிய இராஜ்ஜியத் திட்டத்திற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிராமிய இராஜ்ஜிய திட்டத்தின் கீழ் நேரடியாக குழுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய மற்றும் மாகாண ரீதியான அபிவிருத்தித் திட்டம் குறித்த சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இது மாகாண சபை மற்றும் அதன் அதிகாரங்களை புறந்தள்ளும் ஒரு செயற்பாடாகும் என வடக்கு முதல்வர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் 2016ம் ஆண்டுக்கான வட மாகாண சபை அபிவிருத்தி வேலைகளுக்கு மத்திய அரசாங்கம் 40 வீதமான நிதியை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் விக்னேஸ்வரன் இதன்போது குற்றம்சாட்டினார்.

டக்ளஸ் மீதான வழக்கு: 18 சாட்சிகளுக்கு அழைப்பாணை
 
Indiaஇலங்கையின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், 18 சாட்சிகளுக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்ப இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேடில் 1986-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது சூளைமேடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 1993-இல் டக்ளஸ் தேவானந்தா தலைமறைவானார்.

இதனால், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்தநிலையில், இந்தியாவுக்கு வந்தால் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் காணொலிக் காட்சி மூலம் (வீடியோ கான்பரசிங்) ஆஜராக அனுமதிக்கக் கோரி டக்ளஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘காணொலிக் காட்சி மூலம் மனுதாரர் ஆஜராகலாம். நீதிமன்றம் கருதினால், நேரில் ஆஜராக வேண்டும். அப்போது போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்´ என உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தேவானந்தா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று காவல் துறை சார்பில் கோரப்பட்டது.

இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய 18 சாட்சிகளும் 2016 ஜனவரி 18-ம் திகதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார் என, தமிழக ஊடகமான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வர்த்தகர்கள் கைது

tharasuமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளைப் பாவித்து வர்ததக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 வாத்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அளவுகளும் நியமங்கள் சேவைகளும் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌஸாத் தெரிவிதிதார்.

கடந்த மூன்று தினங்களாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள அரிசி ஆலைகள், சில்லறைகடைகள், பொதுச்சந்தை, மீன்விற்பனை மையங்கள், பழக்கடைகள் உட்பட 80 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளை பாவித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 10 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதம் 6ம் 7ம் திகதிகளில் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
 
Pillayanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சந்திரகாந்தனை கடந்த 2.12.2015 புதன்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருந்தினர்.

அதன் போது சந்திரகாந்தனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று புதன்கிழமை மீண்டும் நீதிமன்றில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை – ஐநா எச்சரிக்கை

united nationsமொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது.

மேலும் அறிந்துகொள்ள.-http://www.bbc.com/tamil/global/2015/12/151125_womentechnology