மேய்ச்சல் நிலத்தில் பயிர்ச்செய்கை சட்டவிரோத செயல் நீதிமன்றம் தீர்ப்பு

batticaloa_grass_landகால்நடை அபிவிருத்திப் பணிகளுக்காக அம்பாறை, பானம பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலங்களில் பலவந்தமான முறையில் முஸ்லிம் மக்கள் நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சட்டவிரோதமான செயல் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்ப்பளித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நிலங்களில் விவசாய நடவடிக்ககளை மேற்கொள்வதை முற்றாகத் தடை செய்த நீதிமன்றம் கால்நடை அபிவிருத்திப் பணிகளுக்காக அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்க்கும் தீர்மானித்துள்ளது.முஸ்லிம்களில் சிலர் தமது மேய்ச்சல் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டி தமிழர் தரப்பினர் பொத்துவில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை ஆராய்ந்த மாஜிஸ்ட்ரேட் நீதிபதி சம்பந்தப்பட்ட நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பினருக்கு அனுமதி வழங்கினார்.

மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழர் தரப்பினர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர்.

அந்த மேல் முறையீட்டின் தீர்ப்பை இன்று வியாழக்கிழமை அறிவித்த நீதிபதிகள் முஸ்லிம் தரப்பினர் பலவந்தமாக சம்பந்தப்பட்ட நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டது சட்டவிரோத செயல் என்று தீர்ப்ப்பளித்திருப்பதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். கணேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் நஷ்ட ஈடு கோரி முஸ்லிம் தரப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்