கூட்டமைப்பு (புளொட்) பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, கவலைக்கிடமாக இருந்த இரு அரசியல்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வந்த இரு அரசியல் கைதிகள் ‘புளொட்’ அமைப்பை சேர்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

மேற்படி உண்ணாவிரதத்தில், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற வழக்கு யாழ்  மேல் நீதிமன்றத்தினால் அவற்றை நிராகரித்து விடுதலை செய்யப்பட்ட சிவராஜா ஜெனிபர் 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையிலும்; இவருடன் மற்றுமொரு அரசியல் கைதியான  வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் முருகேசு கோமகன் 8 நாட்கள் உண்ணராவிரதம் இருந்து  வந்த நிலையிலும் பொலநறுவை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.மேலும் சிவராஜா ஜெனிபரின் வழக்கு தொடர்பில் பொறுப்பாக உள்ள, அதாவது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றதாக கூறப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வழக்கில் சாட்சி சொல்வதை கடந்த ஆறு வருடமாக தவிர்த்து வந்துள்ளார். இதனை அடுத்து மேற்படி இரண்டு அரசியல் கைதிகளும் முறையே கடந்த பத்து, எட்டு தினங்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர்,

இதனை அடுத்து கவலைக்கிடமாக உள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், கூட்டமைப்பின் யாழ். பாராளுமன்ற உறுப்பினரும் ‘புளொட்’ தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ‘புளொட்’ அமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அமல் மாஸ்டர் எனும் வியாலேந்திரன் ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இன்று சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதனின் கவனத்திற்கு பாராளுன்ற உறுப்பினர்களால் இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிற்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்கு அமைவாக அடுத்த வெள்ளிக்கிழமை இதுதொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாட உள்ளதாகவும், இவ்விரு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உறுதிமொழி  அவ்விடத்தில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக  கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் ; உண்ணாவிரதம் இருந்து வரும் இவ்விரு கைதிகளையும் அச்சிறைச்சாலை அத்தியட்சகர் வர்ணகுலசூரிய  முன்னிலையில்  சந்தித்து அழைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களினால் அவ் உறுதிமொழி வழங்கப்பட்டதுடன், இதுகுறித்து முடிந்தவரை தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த பத்து, எட்டு நாட்களாக முறையே உண்ணாவிரதம் மேற்கொண்ட இவ்விரு கைதிகளும் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

இவ்விரு கைதிகளிற்கும் புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமல் மாஸ்டர் ஆகியோர் இணைந்து நீராகாரம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தனர்.

இதனிடையே ‘புளொட்’ தலைவரான, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது  ‘இவ்விரு அரசியல் கைதிகளின் விடயங்கள் தொடர்பாக  சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதுடன், கவலைக்கிடமாக இருந்த இரு கைதிகளின் உடல்நிலையையும், விடுதலையையும் கவனத்தில் கொண்டு, அமைச்சர் சுவாமிநாதனின் உறுதிமொழியில் நம்பிக்கை வைத்து, அதாவது மிக விரைவில் இவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்வதாக எம்மிடம் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்த வாக்குறுதியை சம்பந்தப்பட்ட உண்ணாவிரதிகளுக்கு தெரிவித்து. நாமும் இதுகுறித்து அமைச்சரிடம் வலியுறுத்தி மிகவிரைவில் நல்லதோர் தீர்வு பெற்றுத் தந்து அவர்களின் விடுதலைக்கு முயற்சிப்போம் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்தி, கைதிகள் இருவரினதும் உண்ணாவிரத்தை தற்காலிகமாக நீராகாரம் வழங்கி முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்’ எனக் கூறினார்.