சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க ஜப்பான் முயற்சி-
திருகோணமலை மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சம்பூரில் ஜப்பான் நிறுவனம் ஒன்று அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பூரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்ற பகுதியான 818 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து 515 ஏக்கர் பகுதியை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் நிறுவனம் கோரிக்கை முன் வைத்துள்ள பகுதி மக்களின் வயல் காணிகள் என மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் அனல்மின் நிலையத்தை சம்பூரிலிருந்து மாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சம்பூரில் மின் நிலையத்தை அமைப்பதற்கு ஜப்பான் முயற்சித்து வருகின்றது. எனினும் மீண்டுமொரு அனல் மின்நிலையம் தமது பகுதியில் வர அனுமதிப்பதில்லை என மக்கள் கூறியுள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு தொடுதிரை கையடக்க தொலைபேசிகள்-
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடுதிரை கையடக்க தொலைபேசிகள் மற்றும் மானிய அடிப்படையிலான பெக்கேஜ் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கையடக்க தொலைபேசி மற்றும் புதிய பெக்கேஜ் ஒன்றும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாதுகாப்பான ரயில் கடவை அமைக்கவும், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்-
பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு கோரி கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில் கடவையினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உரிய பாதுகாப்பு கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு கடவைகளை அமைப்பதுடன், கடவைகளில் பாதுகாவலர்களை நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது-
அம்பாறை மாவட்டம் திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்படி கிராமத்திலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றியதுடன், மேற்படி சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.