யாழில் மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படும்-பிரதமர்-

ranilயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் மற்றுமொரு தொகுதி விடுவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரால் பொது மக்களின் காணிகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்முடிவு எதிர்வரும் ஜனவரி மாதம் தெரியவரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு-

kiriyellaஇலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படும் என அந்நாட்டு நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். எனினும், இந்த உத்தேச திட்டத்திற்கு இலங்கை இணங்காது காரணம் இலங்கை மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் அமைச்சர் கிரியல்ல கூறியுள்ளார்.

இலங்கை இந்தியாவிற்கு பெறுமதிமிக்க பங்காளி-சுஷ்மா சுவராஜ்-

sushma suvarajஇனப்பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுடன் காணப்படுகின்ற இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இலங்கை இந்தியாவிற்கு பெறுமதிமிக்க பங்காளி என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே சுஷ்மா சுவராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்தியாவுடனான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. தற்போதைய இந்திய அரசாங்கத்தின் நோக்கம், சர்வதேச நாடுகளுனான உறவை பலப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகரை விபத்தில் கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்-

eerereமட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட கணவனும் மனைவியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகினர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகரை கஜீவத்தை என்னும் இடத்தில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மட்டக்களப்பு கல்லடி வேலூரைச் சேர்ந்த க.விவேகானந்தராசா (52) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி ரஞ்சிதம் விவேகானந்தராசா (49) காயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் வாகரை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.