அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் இலங்கைக்கு விஜயம்-

nisha thesai biswalதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷர பிஸ்வால், இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தடைந்த இவரை, வெளியுறவு அமைச்சு மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை-

sri lankaஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலம் நீக்கப்பட்டு அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள தேசப்பற்றுச் சட்டம் போன்றதொரு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டதுடன் பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நியாயப்படுத்தி பேசிய பலர் கைதுசெய்யப்பட்டதுடன் தமிழ் மக்களின் பேச்சு சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் அழிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த சட்டமூலத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள்மீது தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள்-

parliamentபுதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்துகொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவுக்கான மூன்று பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறும் 19 பேரும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். எனினும் அந்தப் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகளே பெயரிடவுள்ளதாகவும் தெரியவருகிறது. அதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தலா ஏழு உறுப்பினர்களை நியமிக்கவுள்ள அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று உறுப்பினர்களையும் மக்கள் விடுதலை முன்னணி இரு உறுப்பினர்களையும் நியமிக்கவுள்ளன. நியமனம்பெறும் உறுப்பினர்கள் நாடுபூராகவும் சென்று புதிய அரசியலமைப்பு பற்றிய பொதுமக்களின் கருத்துக்களைப் பெறவுள்ளனர். புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக நியமிக்கும் பிரேரணை ஜனவரி 9ம்திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் தமிழ் மக்கள் அவை-

567676767வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் தமிழ் மக்கள் அவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதலாவது கூட்டம் நேற்று யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல மக்கள் நலப் பணிகளை நோக்காக கொண்டு இது உருவாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

sushma suvarajஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விடயத்தை, சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து ஏற்கனவே கூறி இருந்தார்.

சிறுவர் இல்லங்களின் தரத்தினை மேற்பார்வை செய்ய நடவடிக்கை-

nattasha balendranசிறுவர் இல்லங்களின் தரம் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறிப்பாக சிறுவர்கள் தங்வைக்கப்படும் இல்லங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சில சிறுவர் இல்லங்ஙகளிலிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் நட்டாஷா பாலேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுத்திகரிப்பாளர்கள் போராட்டம்-

airportகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சுத்திகரிப்பு செய்யும் தொழிலாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக, விமானநிலையத்தின் வழமையான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக, விமான நிலையத்தின் சுத்திகரிப்பு மற்றும் பயணிகளின் பொதி பரிமாற்ற செயற்பாடுகள் ஸ்த்தம்பித்துள்ளன. விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் 90க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர். தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தாமதித்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்காலிக பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வேலைகள் சுமுகமாக இடம்பெறுவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தலைமன்னாரிலிருந்து படகில் தங்கம் கடத்தல், மீனவர் கைது-

arrestதலைமன்னார் உருமலை கடற்பகுதியில் மீன்பிடி படகொன்றிலிருந்து 5 கிலோகிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்ட்டன் அலவி அக்ரம் குறிப்பிட்டுள்ளார். குறித்த படகிலிருந்த மீனவரொருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு கைப்பற்றப்பட்ட தங்கத்தை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் புத்தளத்தில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்-

errtrtrவவுனியா மற்றும் புத்தளத்தில் இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை பொதுமக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்தவும் எனக் கோரி வவுனியாவில் பொதுமக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா- திருமலை வீதியின் கச்சக்கொடித்தீவு பிரதேசம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்தும் சற்று நேரம் தடைப்பட்டிருந்தது. இதற்கிடையே புத்தளத்தின் மதுரங்குளி மொக்குத்துடுவாய் பாதையை சீரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து புத்தளம்- கொழும்பு பிரதான பாதையில் பொதுமக்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.