இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் 6மாதங்களுள் தீர்க்கப்படும்;-ஜனாதிபதி-

maithripala3வட மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளை 6மாதங்களில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் உறுதி வழங்கியுள்ளார். அதற்காக விசேட செயலணியொன்றை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாழ் மாநரசபை மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற தேசிய நத்தார்தின விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய, ஜனாதிபதி, யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களுக்கு அறிவிக்காமலேயே சென்று பார்வையிட்டாக கூறினார் 25 வருடங்களுக்கு முன் தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு தம்மை அனுப்பி வைக்குமாறே அனைவரும் தன்னிடம் கோரிக்கை விடுத்தாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்புவோர் யாழ்ப்பாணத்திற்கு வந்து நிலமைகளைப் பார்க்குமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சமாதானம் ஏற்பட்டாலும் யுத்தம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து அரசியல் கைதிகள் விசனம்-

jail.......தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து விசனம் அடைவதாக தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில் கடந்த 10ஆம் திகதியில் இருந்து கைதிகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும், முன்னிலையாகும் ஒவ்வொரு தடவையும் தமது வழக்கு விசாரணைக்கான திகதி குறிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 13 கைதிகள் விசேட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தடைவ முன்னிலைப்படுத்தப்படும் போதும் தமக்கு எடுத்த வழக்கு விசாரணைக்கான திகதிகள் மாத்திரம் கொடுக்கப்படுவதாக கைதிகள் தெரிவிக்கின்றனர். அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்திலே விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

xccதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு வாட் பிளேஸில் அமைந்துள்ள பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று காலை 9.30மணியளவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோர் தெரிவித்ததாவது, எங்களுக்கு போதியளவு வசதிகள் இல்லை. எமது பல்கலைக்கழக அமைவிடமும் பொருத்தமானதாக இல்லை. இது பற்றி கடந்த அரசாங்கத்திடமும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடமும் எழுத்து மூலமாக பல கோரிக்கைகளை, பல தடவைகள் முன்வைத்தோம், ஆனால் அதற்கான எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர் கடந்த 10ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதற்கான தீர்வு கிடைக்காமையினாலேயே மீண்டும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கும் தீர்வு கிடைக்காவிடின் மேலும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, இந்த பல்கலைக்கழகத்தில் வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் பலரும் கல்வி கற்கின்றனர்.

27 அரசியல் கைதிகளுக்கு ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியல்-

jailகொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 27பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி அருணி ஆட்டிக்கல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகளில் சிங்களவர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரான்ஸிலுள்ள ரூபன் என்பவரின் தகவலுக்கு அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான போதிய சாட்சியங்கள் இல்லையெனவும் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள அரசியல் கைதிகள் தொடர்பான கூடுதல் சாட்சியங்களை பதிவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் சட்டத்தரணிகளுக்கு பணித்துள்ளார். இதனைடுத்தே 27பேர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை தொடர்பாக குணவர்தனவிடம் விசாரணை-

tajudeenரக்பி வீரர் வசிம் தாஜுடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.கே.டி.எஸ் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தாஜுடீன் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அவர் கொழும்பிற்கு பொறுப்பாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக தகவல்களுக்காக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இவரும் வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாரஹென்பிட்ட மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்துள்ளார்.

நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆணைக்குழுவில் ஆஜர்-

kamaliநீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கமலினி டி சில்வா பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சர்வதேச இணக்க சபை ஆரம்பிக்கும்போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைக்களுக்கே நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆஜராகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரிலிருந்து வந்த மகனைக் காணவில்லையென தந்தை முறைப்பாடு-

xzccகடந்த 13ஆம் திகதி, கட்டாரிலிருந்து நாடு திரும்பிய இளைஞன், இதுவரை வீடு திரும்பவில்லை என்று, காணாமல்போன இளைஞனின் பெற்றோர், வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, மட்டக்களப்பு – புதுமண்டபத்தடி, கன்னன்குடாவைச் சேர்ந்த நவரெட்ணம் குணராஜன் (வயது 22) என்பவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் கட்டார் நாட்டுக்குச் சென்றுள்ளார். எனினும், அங்கு சென்ற பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் கடந்த 13.12.2015 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார். அன்றைய தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். எனினும், அவரை அழைத்து வரச்சென்ற தந்தை, வெகுநேரமாகக் காத்திருந்தும் தனது மகன் வராததால், அங்குள்ள விமானநிலையப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். கட்டாரிலிருந்து நாட்டுக்கு வந்தவர், விமானநிலையத்தை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக, அங்கிருந்த கமெராக்களில் பதிவாகியிருந்த காணொளிகளை ஆதாரத்தை வைத்து, விமானநிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காணாமல் போன இளைஞனுடன், விமானத்துக்கு வந்திறங்கிய, மொரட்டுவையைச் சேர்ந்த குணராஜனின் நண்பன், விமானநிலையத்துக்கு வந்து சோதனைகள் முடியும்வரை, குணராஜன் தன்னுடனேயே இருந்ததாகவும் அதன் பின்னர் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பின்னரே, வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டள்ளது. காணாமல் போயுள்ள இளைஞன் தொடர்பாக எவருக்கேனும் தகவல் தெரிந்தால், 0779424185, 0772768735 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கோரியுள்ளனர். மேலும், கடந்த ஒக்ரோபர் இறுதி வாரத்தில் கட்டாருக்கு சுத்திகரிப்பாளர் தொழிலுக்காக சென்ற தன்னுடைய மகன், புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருடைய நண்பர்மூலம் அறிந்துகொண்டுள்ளதாக, காணாமற்போன இளைஞனின் தந்தை கூறியுள்ளார்.