ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டம்-

inquiryரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 80 வீதமான விசாரணைகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் லெசில் டிசில்வா குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதியின் வாக்குமூலத்தை ஜனவரி 3ம் திகதிக்கு பின்னர் பெற, நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது. இதுஇவ்வாறு இருக்க முன்னதாக சில சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்குமாறு நிஸங்க சேனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்தது. எனினும் சுகயீனம் காரணமாக ஜனவரி 3ம் திகதி வரை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அவரது சட்டத்தரணி தெரியப்படுத்தியுள்ளதோடு, அது குறித்த வைத்திய அறிக்கையையும் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார் என லெசில் டி சில்லா தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி 3ம் திகதிக்கு பின்னர் நிஸங்கவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீ மூட்டிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு-

dead.bodyதீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணுவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும், கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகரன் லதுசாயினி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால், சக மாணவிகள் கேலி செய்துள்ளனர். இதனால் மனவிரக்தியடைந்த மாணவி, கடந்த 03ஆம் திகதி இரவு தனக்குதானே தீ மூட்டிக்கொண்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர், உடனடியாக அவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்த முற்பட்ட அமைச்சின் இணைப்புச் செயலாளர் கைது-

goldஇரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதி மிக்கதான (400 கிராம்) தங்க பிஸ்கட்கள் நான்கை கடத்த முற்பட்டதாக கூறப்படும் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர், இலங்கைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில் வைத்து அவர் கைதாகியுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இன்று அதிகாலை 01.30 அளவில் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்ததாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 42 வயதான குறித்த சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

வாகன விபத்துக்களில் 2,666 பேர் மரணம்-

accidentஇவ்வருடத்தின் இதுவரையிலுமான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 666 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பலியானவர்களில் உந்துருளியில் பயணித்தோர் 968 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 19 நாட்களில் மாத்திரம் மேல் மாகாணத்தில் வீதி ஒழுங்குகளை மீறிய 54 ஆயிரத்து 93 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி காவல்துறை மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழில் சட்டவிரோத ஆவணங்கள், போதைபொருட்களுடன் 4 பேர் கைது-

arrest (30)ஹெரோயின் போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோத கடவூட்சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்த நான்கு பேர் யாழ்ப்பாண காவல்துறையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த அதி சொகுசு ரக சிற்றூர்தி ஒன்றையும் காவல்துறையில் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து, கஞ்சா, ஹெரோயின் வகையை சேர்ந்த திரவ போதைப் பொருட்கள், துகள் வடிவிலான போதைப் பொருட்கள் மற்றும் அவர்களது உரிமையற்ற வெளிநாட்டு கடவூச்சிட்டுக்கள் ஜந்தும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கிரான்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 15 பேர் காயம்-

fireகளுத்துறை மாவட்டம் பாணதுறை வாழைத்தோட்டம் பிரதேசத்திலுள்ள வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தி தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 15பேர் காயமடைந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இடம்பெற்ற இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாலை 10மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஹிருணிகாவுக்கு சொந்தமான வாகனத்தில் ஆட்கடத்தல்-

hirunikaகொழும்பு, தெமட்டகொடை பகுதியில் 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்ற அறுவர் பயணித்ததாக கூறப்படும், டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.

சுமார் 12 நாட்களுக்கு முன்னதாக குறித்த டிபென்டர் அவரது பெயரில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். மேலும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை பொலிஸில் ஒப்படைப்பதாகவும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். எனினும் இந்தக் கடத்தலுடன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பிருப்பதாக தெரியவரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் நேற்று சந்தேகநபர்களை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறப்பட்டது, பின்னர் இன்றுகாலை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது, எனினும் இதுவரை அவர்கள் சரணடையவில்லை, எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எதுஎவ்வாறு இருப்பினும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இக்கடத்தல் இடம்பெற்றமைக்கான காரணம், கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர், கடத்தியதாக கூறப்படுபவர்களில் ஒருவரின் மனையியுடன் தவறான உறவு வைத்திருந்தமையே என அறியக் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.