கடல் நீரை குடிநீராக்க வேண்டாமென வலியுறுத்திய போராட்டம் நிறைவு-

uyuyவடமராட்சி கடலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து வடமராட்சி கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இன்றுகாலை மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை கொண்டுசெல்லும்போது, தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுமென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடல்நீரை சுத்தமாக்குவதற்காக அதிவலு கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, அதனால் கடல்வளம் பாதிக்கப்படும்நிலை ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது ஜீவனோபாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமெனவும் தெரிவித்து மருதங்கேணி மக்கள் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் ஸ்தலத்துக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், “கடல் நீரை குடிநீராக எடுக்கும் திட்டத்தினை நீங்கள் எதிர்க்கும் சந்தர்ப்பத்தில், உங்களின் கோரிக்கைகளை வடமாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்துகின்றோம். முதலமைச்சர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பார். வடமராட்சி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தனுக்கு இந்த மகஜரை கையளிப்பதுடன், வடமாகாண முதலமைச்சரிடமும் தெரியப்படுத்தவுள்ளேன்” என குறிப்பிட்டார். இத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உரிய அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டுமென்றும் எமது பிரதேச மக்கள் உண்ணாவிரதம் இருப்பதை அனுமதிக்க முடியாதென்றும், அந்த வகையில், இத்திட்டத்தினை மேற்கொள்ளும் அதிகாரிகள் இத்திட்டத்தினை பற்றி உரிய கவனம் எடுத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார். இதனையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டதோடு, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரிடம் மகஸர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.