பொறுப்புக் கூறலுக்கு இராணுவம் ஒத்துழைக்க வேண்டும்-அமெரிக்கா-
இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நம்பகமான நீதிப் பொறிமுறைக்குப் படையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், படைத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மூன்றுநாள் பயணமாக கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கலாநிதி அமி சீரைட், இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம், இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை, மூன்று நாள் இலங்கை பயணத்தை கலாநிதி அமி சீரைட் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவரது பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மனிதாபிமான உதவிகள், இயற்கைப் பேரிடர்களில் பணியாற்றுதல், வெளிநாடுகளில் அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் இலங்கை படைகளின் எதிர்கால பங்கு குறித்து ஆராயவே, கலாநிதி சீரைட் கொழும்பு வந்திருந்தார். இவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, ஆகியோருடன், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, பயிற்சி மற்றும் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஆளனி உதவி வழங்கல், உள்ளிட்ட இலங்கை அரசின் முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார். இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை சந்தித்த கலாநிதி சீரைட், காணிகளை மீளளித்தல், நல்லிணக்கம், நம்பகமான இடைக்கால நீதிப்பொறிமுறை என்பனவற்றின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், எதிர்கால பாதுகாப்புத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார். அத்துடன், பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க ஆகியோருடன் இராப்போசன விருந்துகளிலும், கலாநிதி சீரைட் பங்கேற்றிருந்தார். மனித உரிமை செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்த கலாநிதி சீரைட், பாதுகாப்பு உறவுகள் மற்றும் இராணுவக் கொள்கை குறித்து சிவில் சமூகம் முக்கிய பங்காற்றவும் வலியுறுத்தினார். இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பின்போது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தமது கரிசனையையும் கலாநிதி சீரைட் வெளிப்படுத்தியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.