ஹிருணிகாவின் வாகனத்தில் கடத்தல், அறுவருக்கு விளக்கமறியல்-

courtsகொழும்பு, தெமட்டகொடை கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அறுவர் நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டனர். முன்னதாக, சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்தது. இதேவேளை இந்த விடயம் குறித்து நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த ஹிருணிகா, தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது டிபென்டர் பயன்படுத்தப்பட்டது உண்மை எனினும், அது தனது அனுமதியுடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு தரப்பினரிடம் வந்த, ஒருவர் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறியதோடு, கடத்தல்காரர் இருப்பதாக கூறப்படும் இடம் தனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்ட நிலையில், தனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சென்றதாக ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார். பின்னர் பெண்ணைக் கடத்தியதாக கூறப்படும் நபரை பேச வேண்டும் என அழைத்தபோது, அவர் வர மறுத்ததால் பலவந்தமாக அழைத்துச்செல்ல நேரிட்டதாகவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் தனது தலையீட்டினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தான் தாக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை பின்னரே தனக்கு தெரியவந்ததாகவும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்திருந்தார்.