அரசியல் யாப்பு குழுவிற்கு தமிழ் பிரதிநிதிகள்-
அரசியல் யாப்பு சம்பந்தமான அமைச்சரவை உபக்குழுவினால் உருவாக்கப்பட்டுள்ள விசேட குழுக்களுக்கு இரண்டு தமிழ் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் குறித்த இரண்டு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதன்படி எல்லை மறுசீரமைப்பு சம்மந்தமான விசேட குழுவுக்கு மலையக செயற்பாட்டாளர் பி.முத்துலிங்கமும், மக்கள் கருத்தறியும் குழு பேராசிரியர் விஜயசந்திரின் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த வன்முறைகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாத்ரீகர்கள் பாதுகாப்பு கருதி விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்-
சிவனொளிபாத மலை இவ்வருட யாத்திரை ஆரம்பமானதை தொடர்ந்து அதிகமான யாத்ரீகர்கள் தற்போது சிவனொளிபாத மலையை நோக்கி வருகை தந்தவண்ணம் உள்ளனர். இன்று ஆரம்பமான சிவனொளிபாத மலை யாத்திரை எதிர்வரும் வெசக் பௌர்ணமி வரை 6 மாதங்களுக்கு இடம்பெறும். இதனிடையே, சிவனொளிபாத மலை யாத்திரைக்காக வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவற்துறையால் அவசர தொலைபேசி எண்கள் 5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நோர்டன் பிரிட்ஜ் – நல்லதண்ணி பிரதேசத்தினூடாவ வருகைதரும் பக்தர்கள் 052-20 555 22, 052 20 555 00 மற்றும் 071 85 911 22 இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பக்தர்களின் அவசர பாதுகாப்பு உதவிகளை தெரிவிக்கலாம். மேலும், இரத்தினபுரி பிரதேசத்தினூடாக வருகை தரும் பக்தர்களுக்காக இரு தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 045 223 22 22 மற்றும் 071 85 913 85 இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிப்பதற்கு பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
120 வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழப்பு-
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக சென்ற 120 பேர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், சவுதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்ய உத்தரவிடப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண்ணின் தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மேன்முறையீட்டின் அடிப்படையில் இந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
யாழ். சிறையில் இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-
தமது விடுதலையை வலியுறுத்தி யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. பண்டிக்கைக்காலத்தை முன்னிட்டு தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்றுகாலை உணவை பகிஷ்கரித்துள்ளனர். இந்திய மீனவர்களின் உணவுத் தவிர்ப்பு குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜா மற்றும் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துதடன் கலந்துரையாடி, உண்ணாவிரதத்தினை நிறுத்துமாறு இந்திய மீனவர்களிடம் கேட்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளினை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பழைய தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும்-
புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் பழைய அடையாள அட்டை செல்லுபடியாகுமெனவும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மாத்திரமே புதிய அடையாள அட்டை வழங்கப்படுமெனவும் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் பன்னிரண்டு இலக்கங்களை கொண்ட இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பழைய அடையாள அட்டை பயன்படுத்துபவர்களுக்கு அது காணாமல் அல்லது தெளிவற்று போனால் மாத்திரமே புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில், அதன் உரிமையாளரின் சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகையும் உள்ளடக்கப்படவுள்ளது.
நீதிமன்றிலிருந்து தப்பி மட்டு வாவியில் குதித்த கைதி பிடிபட்டார்-
மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி வாவியில் குதித்த கைதியை பொலிசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நேற்றுக்காலை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு பொலிசாரினால் அழைத்து வரப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள கோட்டமுனை வாவியில் குதித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் துரிதமாக செயற்பட்டு தோணியில் சென்று அவரை பிடித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக மட்டக்களப்பு பொலிசார் குறிப்பிட்டதுடன், குறித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இவர் வவுணதீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
கிளிநொச்சியில் வெடியில் சிக்கி 2 குழந்தைகள் காயம்-
கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடி, வெடித்ததில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இவர்கள் அப்பகுதியினூடாக பயணித்தவேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த வெடி வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.