ஒருவரை கடத்த ஆதரவு வழங்குவது, கடத்தியவரை அச்சுறுத்துகின்றமை தவறு-பிரதீபா மஹானாமஹேவா-

pradeepa mahanamahewaபட்டப்பகலில் கொழும்பு தெமட்டகொடயில் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் 6 பாதுகாவலர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ப்ரியன்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவிடம் விசாரணை நடத்தியதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் ஹிருனிக்கா பிரேமசந்திரவிற்கு சொந்தமான டிப்பென்டர் ரக வாகனமும் நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவிற்கு சொந்தமான டிப்பென்டர் ரக வாகனத்தில் சென்றவர்கள் தெமட்டகொட ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 34 வயதுடைய அமில ப்ரியங்கர அமரசிங்க என்பவரை கடத்திச் சென்றனர்.தாம் கடத்தப்பட்டு கொலன்னாவ பிரதேசத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் காரியாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அங்கு தம்மை அச்சுறுத்தியதாகவும் கடத்தப்பட்டவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னர், கடத்தலுடன் தொடர்புடைய 6 பேரும் நேற்று முன்தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இதன்போது, ஹிருனிக்கா பிரேமசந்திரவிற்கு சொந்தமான டிப்பென்டர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான பிரதீபா மஹானாமஹேவா, “குற்றவியல் சட்டத்தின் 353 சரத்திற்கமைய, எவரேனும் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பலவந்தமாக அழைத்து செல்லப்படுதல், அல்லது அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி அழைத்து செல்லும் செயற்பாடானது கடத்தலாகவே கருதப்படும். அவ்வாறான சந்தர்பத்தில் எவரேனும் இந்த குற்றத்திற்கு ஆதரவு வழங்குவாரயின் அவரும் தவறிழைத்தவராகவே கருதப்படுவார். இதற்காக 7 வருட சிறை தண்டனை வழங்க முடியும். அதுமாத்திரமின்றி கடத்திச் செல்லப்பட்டு அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தப்படுமாயின் அந்த தண்டனையானது அதிகரிக்கப்படும் என கூறியுள்ளார்.