இரு பாடசாலை மாணவிகளைக் காணவில்லையென முறைப்பாடு-
பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வீட்டில் இருந்து இருவரும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். பாடசாலைக்கு சென்ற இருவரும் மாலை ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஜனவரியில் இலங்கைக்கு விஜயம்-
எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின்போது இலங்கையுடன் 10 இருதரப்பு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி த ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவூட்டுதல், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பரிமாற்றம், பணத் தூய்தாக்கலுடன் தொடர்புடைய நிதி நிலைமைகள் பற்றிய புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய சில துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என கூறப்படுகின்றது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போதே இறுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை பாகிஸ்தான் இடையே நீண்டகால உறவுள்ளதுடன், இலங்கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சிகளையும், பாதுகாப்புத் தளபாட உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கிவருகின்றது.
தேர்தலில் ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு அர்ப்பணிப்பேன்-மகிந்த-
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். கந்தானை நாகொடவிலுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெள்ளை வான் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் இன்று அவ்வாறான ஒரு சூழல் இல்லை எனவும், ஆனாலும், தற்போது டிபெண்டர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
நத்தாரை முன்னிட்டு 557 கைதிகளுக்கு விடுதலை-
புனித நத்தார் தினத்தை முன்னிட்டு 557 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். இதன்படி ஜனாதிபதி மன்னிப்பின்கீழ், 557 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.