ஊடகவியலாளர்மீதான தாக்குதல், வன்னி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்-

vanni reporterஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தற்போதும் இலங்கையில் தொடர்ந்த வண்ணமேயுள்ளது இவ்வாறு வன்னி ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் கி.வசந்தஷரூபன் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்;கையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்போது, இந்நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போது இல்லை எனவும் கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், வடபகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கம் கூறும் கருத்துக்களை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. வவுனியா நகரப் பகுதியில் வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்களின் விளம்பர பதாதைகள், கொட்டகைகள் அனைத்தும் பொலிஸாரின் துணையுடன் வவுனியா நகர சபையால் நேற்று அகற்றப்பட்டன. இதன்போது பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபொழுது, பிராந்திய ஊடகவியலார் பா.கதீசனது புகைப்பட கருவி பறிக்கப்பட்டு வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியராக கடமையாற்றுபவர் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். பொலிஸார் முன்னிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலின்போது அவரது சங்கிலி ஒன்றும் அபகரிக்கப்பட்டுள்ளது. புதிய நல்லாட்சி அரசின் காலத்திலும் பொலிஸார் முன்னிலையில் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலும், அடக்குமுறைகளும் தொடர்கின்றன. சில தனிநபர்கள் சட்டதை மதிக்காது அதிகாரத்தை கையிலெடுக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு ஊடகவியலாளர்கள் மீது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பில் சரியான விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமையே காரணம். இதனாலேயே சிலர் சிறிதும் அச்சமின்றி இன்றும் தொடர்ச்சியாக ஊடகவியலாளரை அச்சுறுத்தி தாக்குகின்றனர். இதனால் பிராந்திய ஊடகவியலாளின் பாதுகாப்பு புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற முறையில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறான குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனை சமூகத்திற்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதுடன், பிராந்திய மட்டத்தில் செயற்படும் ஊடகவியலாளர் தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் அச்சமின்றி முன்னெடுக்க உதவியாக இருக்கும். சமூக நோக்கத்துடன் தம்மை அர்ப்பணித்து ஊடகப் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளரின் பாதுகாப்பு தெடர்பிலும், ஊடக சுதந்திரம் தொடர்பிலும் இந்த அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.