தென்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சவுதி அரேபியாவிற்கு அழைப்பு-
இலங்கையின் தென்பகுதியில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்குமாறு சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக அரேபிய செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான ஓர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பட்சத்தில் இலங்கையை அண்மித்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகைகளை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபிய நிதிக்கொள்கை முகவர் பஹாட் பின் அப்துல்லா அல் முபாரக்குடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கரையோர நகரான ஹம்பாந்தோட்டையில் இந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முடியுமென அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களை அமைத்தல் உள்ளிட்ட உட்கட்டுமான நடவடிக்கைகளிலும் சவுதி நிறுவனங்கள் ஈடுபட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகச் சிறந்த பொருளியல் நிபுணர்களில் ஒருவராக கருதப்படும் அர்ஜுன மகேந்திரன் சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.