ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பதினொரு வருடங்கள் பூர்த்தி-

tsunamiசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினொரு வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிவடைந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன. காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகர் காணாமற் போயினர். இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகினர். சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, நாடளாவிய ரீதியில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும், காலை 9.25முதல் 9.27வரையிலான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவாஞ்சலியும், நன்றி நவிலலும்-

suppuஅமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவாஞ்சலி நிகழ்வும் நன்றி நவிலலும் கடந்த 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் Schorndorfer  str.31 71638 Ludwigsburg என்னுமிடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமரர் சிவகுமாரன் அவர்களது திருஉருவப்படத்திற்கு திரு யோகா புத்ரா அவர்கள் மலர்மாலை அணிவித்து மலராஞ்சலியுடன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அகல்விளக்கு சுப்பர் அவர்களின் பால்ய நண்பர்களான திரு. ஆனந்தராசா (கப்பல்) (உவடி) என சுப்பர் அவர்களால் அன்பாக அழைக்கப்படும் திரு. பத்மநாதன் ஆகியோரினால் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்தோர் மலராஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் உரைநிகழ்த்திய புத்திரா அவர்கள், சுப்பர் அவர்களது கடந்தகால சிந்தனைக் கருத்துக்கள் பற்றியும், அவர் தாயக மக்களின் தேவைகள் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்று யதார்த்தமாகியுள்ளது பற்றியும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திரு. ஜெகநாதன், ஆசிரியர் திரு விவேகாநந்தன் ஆகியோர் சுப்பர் அவர்கள் கடந்த காலத்தில் மக்களுடனும் நண்பர்களுடனும் எவ்வாறு பழகியவர் நடந்து கொண்டவர் என்பவற்றை நினைவுகூர்ந்தனர்.

மகிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவு-

spமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமலே ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாகவும், இவ்வாறு இணைந்து கொள்வோரில் 6பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மகிந்த அணியினர் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும், அதிலிருந்து விலகும் மற்றுமொரு குழுவினர், மாற்றுக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கூறுகையில், தமது அணியின் உறப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை என்றும், இது கூட்டு எதிர்க்கட்சியைக் கண்டு அஞ்சி அரசாங்கம் பரப்பும் போலி பிரச்சாரம் என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

கொழும்பில் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை-

busஅடுத்த ஆண்டு முதல் கொழும்பு நகரத்திற்குள் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் 2016ம் ஆண்டு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலில் இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறிய பஸ்கள் 80 இனைக் கொள்வனவு செய்தல், நாடு பூராகவும் உள்ள பஸ் டிப்போக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அனைத்து டிப்போக்களுக்கும் பற்றுச்சீட்டு இயந்திரங்கள் வழங்குவதை இறுதி செய்தல் உட்பட்ட பல திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சு கூறுகின்றது.

உயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு 73வது இடம்-

ssssஉயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் 73வது இடம் கிடைத்துள்ளது. 2015ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 188 நாடுகளை மையப்படுத்திய தரப்படுத்தலில் இலங்கை படிப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் பெரும்பாலான அரச பணியாளர்கள் 60 வயதில் ஓய்வுபெறுகின்றனர். எனினும் சுயதொழில் மற்றும் நாளாந்த பணியாளர்கள் பல வருடங்களுக்கு பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அது 12வீதமாக பதிவுப்பெற்றுள்ளது. இந்த தரப்படுத்தலில் இலங்கை 73 இடத்தில் உள்ளநிலையில் இந்தியா 130வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகியன முதல் ஐந்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் மோசமான புள்ளிகளை நாடுகளாக நைகர், எரிட்ரியா, புருண்டி தரப்படுத்தலில் கீழ் மட்டத்தில் உள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது சந்திப்பு-

vigneswaranவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட அமர்வு நாளையதினம் நடைபெறவுள்ளது.

இதன்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் தமிழ் மக்களின் கலை கலாசாரங்கள் குறித்த விடயங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கான விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு புதிய நடைமுறைகள் அறிமுகம்-

paffrelநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் சம்பந்தமாக புதிய பரிந்துரைகளை பல அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பம் இருப்பதாக பவ்ரல் அமைப்பு கூறியுள்ளது.

அரச அதிகாரிகள் தேர்தலில் போட்டியுடுவதன் மூலம் வாக்காளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பாடாதவாறு நடத்துவதற்கு நடைமுறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடுகின்ற தொகையிலும் கட்டுப்பாடு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக உள்ளூராட்சி மன்ற அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு-

ulluratchi sabaiஇதுவரை கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் மேலும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நகர சபை மற்றும் மாநகர சபைகளின் ஆட்சிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 31ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.