சுன்னாகம் கிணற்றுநீர் தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்-

chunnakamயாழ். சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடிநீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் சுன்னாகம் நீரில் அச்சுறுத்தும் வகையிலான பார உலோகங்கள் இல்லை எனவும், குடாநாட்டு நீரில் மலக்கிருமிகளின் தாக்கம் உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அறிக்கை தமக்கு சாதகமாக உருவாக்கபட்டுள்ளது எனவும் சுன்னாகம் குடிதண்ணீரை குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பதை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் கூறவேண்டும் என வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிண்ணியாவில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு-

kinniyaதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிண்ணியா, கொட்டியாரக்குடா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (25) தனது நண்பர்கள் இருவருடன் சென்ற இவர், ஆற்றில் வலையை வீசி விட்டுச் சென்றுள்ளார். பின்னர், அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுள்ளதா எனப் பார்வையிடச் சென்றபோது, இவர் காணாமல் போயுள்ளார். பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இவரைத் தேடும் நடவடிக்கை சனிக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இவரது சடலம் கரையொதுங்கியதாகவும், ஏனைய இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகிந்தவின் புதிய கூட்டணி-

mahinda (4)மகிந்த ராஜபக்ச சார்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“ (எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஹிந்த சார்பு அணியினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதோடு, இதற்கு பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போராட்டம் காரணமாகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிளவின் விளிம்பில் இருப்பதாகவும், அதில் அங்கம் வகிக்கும் 15பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.