Header image alt text

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 03வது பொதுக்கூட்டம்-(படங்கள் இணைப்பு)

IMG_3203தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 03வது பொதுக்கூட்டம் கழகத்தின் தலைவர் திரு.சு.காண்டீபன் தலைமையில் நேற்று 27.12.2015 ‘வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கழகத்தின் உறுப்பினர்களின் செயற்றிறனின்பால் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கௌரவ நா.கமலதாசன் அவர்களுடன் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற அதிபர் திரு.பரஞ்சோதி, வேப்பங்குளம் பிள்ளையார் தேவஸ்தானத்தின் மதிப்பிற்குரிய மதகுரு கஜேந்திர ஷர்மா,இளைஞர் சேவைகள் அதிகாரி அஜித் சந்திரசேன, இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் திரு.அமுதவாணன், இளைஞர் கழக மாவட்ட சம்மேளன பொருளாளர் முகிலன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், ஆசிரியர் சந்திரமோகன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், புதிதாக கழகத்தில் இணைந்த உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Read more

வாகரையிலிருந்து கொழும்பிற்கு நேரடி பஸ் சேவை-

busமட்டக்களப்பு வாகரை பேருந்து சாலையானது பயணிகளின் நன்மை கருதி கொழும்பிற்கான தமது நேரடி பேருந்து சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இப் பேருந்து சேவையானது இன்று முதல் திருகோணமலை சேருநுவரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வாகரை ஊடாக வாழைச்சேனை நகரம் வந்தடைந்து அங்கிருந்து கொழும்பிற்கான சேவையினை மேற்கொள்ளவுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு திருகோணமலை சேருநுவரவில் இருந்து புறப்படும் பேருந்தானது மாலை 4மணிக்கு கொழும்பினை சென்றடையும். மறுநாள் மாலை 4 மணிக்கு கொழும்பில் இருந்து அதே வழிப்பாதையில் சேருநுவரவிற்கு 12 மணிக்கு சென்றடையும். இதேவேளை, வாகரை பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது தூர இடங்களுக்கான போக்குவரத்தினை வாழைச்சேனை நகரம் வந்து புகையிரதம் மற்றும் தனியா் அரச பேருந்துகளில் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருவது வழக்கமாகும். இதனால் நேர விரயமும் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர். மேற்படி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்து பிரதேச மக்கள் சாலை நிர்வாகத்திற்கு தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

வாக்காளர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்-

election2015ம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காலம் இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. குறித்த பெயர்ப்பட்டியல் கிராம சேவகர் அலுவலகம், மாவட்ட தேர்தல் செயலக அலுவலகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், www.slelections.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இந்த விபரங்களை பார்வையிட முடியும். அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் செயலக அலுவலகங்களுக்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. புதிதாக பெயர்கள் அதில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், திருத்தங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.

ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர் அவுஸ்திரேலியாவில்-

ravirajதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேகநபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாபியன் ரோய்ஸ்டன் டௌசியன்கூ என்ற சந்தேக நபரே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதாகவும் அவரை கைது செய்து கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறும் இலங்கைப் பொலிஸார் அவுஸ்திரேலிய பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். சந்தேக நபர் பணியாற்றும் தனியார் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த மாலினி வென்டுரா என்பவருக்குச் சொந்தமானது என்றும் 2014ஆம் ஆண்டு அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை அங்கு பணியாற்றிய கொலைச் சந்தேகநபர் தற்போது தமது நிறுவனத்தில் பணியாற்றுவதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை பணியிலிருந்து விலக்கியதாகவும், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் நால்வருக்கு உடனடி இடமாற்றம்-

policeஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவையின் அவசியம் கருதி பொலிஸ் மா அதிபர் என. கே. இளங்ககோனினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சாவகச்சேரி தலைமையகத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய டபிள்யூ.கே.தர்மசேன, பொலிஸ் தலைமையகத்தின் மக்கள் ஒருங்கிணைப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். கேகாலை பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எஸ்.மெனிக்கே, சாவகச்சேரி பிரதான பொலிஸ் பரிசோதகராக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.டி.சி.பிந்து புத்தளம் வலயத்திற்கும், பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.ஆர்.செனவிரத்ன கல்கிஸ்ஸையிலிருந்து மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்-

vidyaபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். இன்றையதினம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்-

dumindaசொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கு அமைவாகவே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 2011,2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தமது சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே ஊழல் விசாரணை ஆணைக்குமு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு-

drawnயாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோது படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார். ஒருவர் நீந்திக் கரைசேர்ந்தார். மற்றயவர் கடல் அலையில் அடித்துச் செல்லும்போது சக மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலத்தை தேடும் பணி தொடர்கிறது. எஸ்.ஜோர்ஜ் (வயது 45), அந்தோனிமுத்து ஜெனிபட் (வயது 34) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். மேலும் மரண விசாரணையை பருத்தித்துறை பதில் நீதிவான் பா.சுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார்.