கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலை விழாவும் பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு)
யாழ். கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் – 2015 கைதடி மாதர் அபிவிருத்திச் சங்க முன்றலில் இன்று நடைபெற்றது. கைதடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் திருமதி செ.கேதாரகௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக திருமதி ப.செல்வநாயகம் (அதிபர், குருசாமி வித்தியாசாலை, கைதடி), திரு. ச.தங்கராசா (முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர்), திருமதி சு.தனபாலசிங்கம் (முன்பள்ளி இணைப்பாளர், தென்மராட்சி), திரு. சி.செல்வநாயகம் (செயலாளர், கயிற்றசித்தி கந்தசுவாமி தேவஸ்தானம்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். விருந்தினர்கள் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும், முன்பள்ளி சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றார்கள். நேற்று முன்தினம் (29.12.2015) தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் என்னை அலுவலகத்திற்கு அழைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் நடாத்தும் மேற்படி கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது இந்த அம்பிகா முன்பள்ளியினுடைய கலைவிழாவில் நான் கலந்துகொள்வதற்கு ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டிருக்கின்றேன். ஆகவே அவர்களுக்கு மனக் கஸ்டத்தைக் கொடுக்கக்கூடாது. எனவே, இந்த கலை நிகழ்விலே நான் கலந்துகொள்கிறேன். அத்துடன் கொழும்பு சென்று திரும்பி வருவதற்கு நேரமும் போதாது என்பதை நான் அவருக்கு விளக்கிக் கூறியதோடு, முக்கியமாக தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிந்த நீங்கள் திரு. சம்பந்தன் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தையில் இருக்கின்றீர்கள்தானே. மற்றையவர்களும் வருவார்கள். நீங்கள் இப்போது பேச்சுவார்த்தையை முன்னெடுங்கள், நான் அடுத்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறேன் என்றேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார். மேலும், சிறுவர்களுடைய கல்வியின் முக்கியத்துவதை வலியுறுத்திய அவர், இந்த ஆரம்பப் பாடசாலை சிறுவர்களுடைய வாழ்க்கையிலே கல்வியின் ஆரம்பமாகத் திகழ்கின்றபடியால் இப் பாடசாலைகளின் முன்னேற்றம் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.