யாழில் 700ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை-

resettlementயாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் காணியில் 700 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றக்கூடியதாக இருக்கும் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட இந்தக் காணிகளை தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்கள் கையேற்று வேலிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ். குடாநாட்டில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக 701.5 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார். நாட்டில் நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் யாழ். குடாநாட்டில் மாத்திரம் சுமார் 12,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 701.5 ஏக்கர் காணியில் விவசாய நவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு காணிகளை துப்பரவு செய்வதற்கு உபகரணங்களும் உணவுப் பொதிகளும் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கான கொடுப்பனவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவுள்ளன. இதனைத் தவிர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65,000 வீடுகளை அமைக்கும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு மேலதிகமாக 2015 ஆம் ஆண்டில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சியில் 500 ஏக்கர் காணிகளும், திருகோணமலை சம்பூரில் 1000 ஏக்கர் காணிகளும் மேலும் சில இடங்களில் சிறிய காணித் துண்டுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.