மட்டக்களப்பிலிருந்து மொரட்டுவைக்கு நேரடி பஸ்சேவை-
முதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து மொறட்டுவைக்கான நேரடி பஸ்சேவை புத்தாண்டு தினமான இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொறட்டுவ மற்றும் பேராதனை பல்கலை கழக மாணவர்களின் நன்மைகருதி ஊவா மற்றும் மத்திய மாகாணத்தினூடாக இச்சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் துரை.மனேகரன் தெரிவித்தார். தினமும் காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்திலிருந்து புறப்படும் இப்பஸ்சேவை வவுணதீவு, கறடியனாறு, பதியதளாவ. மஹியங்கனை, பதுளையூடாக கண்டி, பேராதேனிய வழியாக வறக்காப்பொலயூடாக களனி, வெள்ளவத்தையூடாக மொறட்டுவையை அடையுமென அவர் மேலும் தெரிவித்தார். புதிய பஸ் சேவை ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போ பிராந்திய செயலாற்று முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை குடும்பம் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு, இலங்கையர் நால்வர் கைது-
அமெரிக்காவின் – சான் அன்டோனியோ பிராந்தியத்தில் இருந்து இலங்கையர் ஒருவரின் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு, அங்குள்ள பொது மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை, இந்த மாதம் நாடு கடத்துவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு, பிராந்தியத்துக்கு பொறுப்பான காங்கிரஸ் உறுப்பினரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சுமார் 5 ஆயிரத்து 500 பேர் மனு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யுக்ரெயினில் இருந்து ரொமேனியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொமேனிய எல்லைப்பாதுகாப்பு படையினரால், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யுக்ரெயின் – ரொமேனிய எல்லைப்பகுதியின் ஊடாக சட்டவிரோத அகதிகள், அதிகளவில் பிரவேசிப்பதன் காரணமாக அங்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 4பேரும் அங்குள்ள ரிஸ்ஷா அருவியின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 21 முதல் 46 வயதுகளை உடையவர்கள் என கூறப்படுகின்றது.