பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் மாற வேண்டும்-

dfdfயாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத பெண்களையும் மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும் என்று யாழ். உயர் நீதிமன்ற நீதபதி மா.இளஞ்செழியர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியபிரமான நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்திய பிரமாணத்தினை செய்து கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள மாவட்டமாக மாற வேண்டும். போதைவஸ்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும். பெண்களை பாதுகாக்கும், ரவுடித்தனம், காடைத்தனம் அழிக்கப்படும் மாவட்டமாக மாறவேண்டும். இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் அனைத்து குற்றச் செயல்களையும் ஒழித்து, சமாதானமான, சுதந்திரமான யாழ். குடாநாட்டினை உருவாக்குவதற்கு, நீதித்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒத்துழைத்துக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு எமக்கு கவலைக்குரிய ஆண்டாக மாறியது. நீதிமன்ற தாக்குதல் இடம்பெற்றது. புங்குடுதீவில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவங்கள் அனைத்தும், நீதித்துறைக்கு சவால் விடுக்கப்பட்ட சம்பவங்களாக இருந்தன. அந்த ஆண்டு இன்றுடன் நிறைவுபெற்று விட்டது. நீதிபதிகள் கடமைகளை செய்யும் போது, சமூக நலன்கொண்ட தீர்ப்பாக அமைய வேண்டும். சமூக நலனைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் கருவி தான் நீதிபதி என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.