கரவை சிந்தாமணி விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும், பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு)
யாழ். கரவெட்டி சிந்தாமணி விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் முன்பள்ளியின் தலைவர் திரு. ந.சிறீகாந்த் அவர்களது தலைமையில் நேற்று (02.01.2016) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன், திரு. க.பொன்னையா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்தினர்கள் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்தும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
கிராமபுறப் பாடசாலைகளிலே குறிப்பாக இந்த ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் எங்கள் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கினை ஆற்றவேண்டும். அந்தவகையில் இந்த முன்பள்ளியானது மிகச் சிறந்த பணியினை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.
ஏனென்றால் சிறார்களுக்கு இந்த ஆரம்பக் கல்வி தான் மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது. அதுபோல் அயலில் இருக்கின்ற ஆரம்பப் பாடசாலையான கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலே மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இவைகள்மூலமே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டணப் பாடசாலைகளை நோக்கி கொண்டுசெல்கின்ற தன்மையைக் குறைத்து, அதன்மூலம் குழந்தைகள்மீது திணிக்கப்படுகின்ற அழுத்தங்களையும் குறைக்க முடியும். ஏனென்றால் அவர்கள் நீண்டதூரம் பயணம் செய்வதால் மிகவும் களைத்துப்போய் விடுகின்றார்கள். இதன் காரணமாக அவர்களின் செயற்பாட்டுத் திறன்கள் குறைக்கப்படுகின்றன. எனவே கிராமப் பாடசாலைகளின் தரங்களை உயர்த்த வேண்டும். இதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு ஊக்கமளித்து, தங்கள் கிராமப் பாடசாலைகளை முன்னேற்றுவதற்கு உதவ வேண்டும். இதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளுடைய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நீண்டதூரம் பயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் தவிர்த்து தங்கள் கண்காணிப்புக்குள்ளேயே குழந்தையை வைத்திருக்கவும் முடியும்.
இந்த வகையிலே தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும், உறுதிசெய்து கல்வியையும் உயர்த்துவதற்கு பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். இந்த விடயத்திலே பல பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். இதற்கு நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை அளிப்போம் என்று தெரிவித்தார்.