சம்பூர் மகா வித்தியாலயத்தை கையளிக்கும்படி கோரிக்கை-

dgfgfகடற்படையினரின் வசமுள்ள சம்பூர் மகாவித்தியாலயத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2006ம் ஆண்டு திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆயுத மோதல்களால் சம்பூர் பிரதேச மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. அதன் பின்னர் இன்றுவரை கடந்த 10 வருடங்களாக சம்பூர் மகாவித்தியாலயமும், அதனைச் சூழவுள்ள பெருந்தொகையான குடிநிலப்பரப்பும் கடற்படை முகாமாகவும் கடற்படையினரின் ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2015ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம், மக்களுக்குச் சொந்தமான காணிகளை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதன் பின்னணியில் 818 ஏக்கர் குடியிருப்பு நிலம் மக்கள் பாவனைக்கு வழங்கப்படல் வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் விடுவிக்கப்பட்ட தமது காணிகளில் குடியமர்த்தப்பட்டுத் தற்காலிக கூடாரங்களில் தற்போது வசித்து வருகின்றனர். ஆனால், அந்த குடியிருப்புப் பிரதேசத்துக்கு மத்தியில் அமைந்துள்ள சம்பூர் மகாவித்தியாலயம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. 2 அல்லது 3 மாதங்களில் இப் பாடசாலை, மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்காக வழங்கப்படுமென கடற்படையினரால் அப்போது உறுதியளிக்கப்பட்ட போதும், இப்பொழுது 7 மாதங்கள் கடந்த நிலையில் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் தற்பொழுது மீள்குடியேற்றப்பட்ட மாணவர்கள் நீண்ட தூரப் பயணம் செய்தே வேறு இடங்களில் இயங்கும் பாடசாலைகளில் தமது கல்வியைத் தொடரவேண்டியுள்ளது. அத்தோடு தற்போதைய மழைக்கால நிலையும், அதனால் வீதியில் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையும் மாணவர்களின் கல்வியை வெகுவாகப் பாதிக்கின்றன. இது விடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.