தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியினரான 90 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில், கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த பொது நூலகத்தில் இன்றுமாலை (05.01.2016) நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் திரு. அமுதன், தமிழ் தேசிய இளைஞர் கழக உப தலைவர்களில் ஒருவரும், வயம்பா பல்கலைக்கழக மாணவனுமான திரு இ.சாருஜன், கழக இணைப்பாளர்களில் ஒருவரும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனுமான சி.இந்துஜன், கழக உறுப்பினர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 3வது பொதுக்கூட்டம் கடந்த 27.12.2015 அன்று வன்னி இன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டிற்கான செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், எமது மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கழகத்தின் செயற்றிட்ட ஆண்டறிக்கையில் கழகம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இன்னும் பல மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான வேண்டுகைகள் கழகத்தின் நிர்வாகத்திடம் இருப்பதனால், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடாக உதவி புரிய விரும்பிய நல்லுள்ளங்கள் கழகத்தின் செயலாளரும், ஊவா வெல்லச பல்கலைக்கழத்தின் மாணவனுமான திரு ஸ்ரீ.கேசவன் அவர்களுடன் தொடர்புகொண்டு தமது சமூக பணிகளை முன்னெடுக்க முடியும். (தொ.இல- 0775058672) குறிப்பு – கற்றல் உபகரணங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும், நிதி அன்பளிப்பு பெற்றுக்கொள்ளப்படமாட்டாது.
செய்திகளுக்காக (ஊடகபிரிவு) தமிழ் தேசிய இளைஞர் கழகம்.