பாகிஸ்தான் – இலங்கையிடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

sri lanka pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 8 உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்தாகியுள்ளன. இதன்படி பணச்சலவை, பொருளாதார, வர்த்தக மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நிகழ்வில் உரையாற்றிய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், எதிர்காலத்தில் இலங்கையின் மேம்பாடுகள் தொடர்பாக தமது அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த யுத்தகாலத்தில் பாக்கிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என, ஜனாதிபதி மைத்திரிபால கூறினார்.

தமது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் கைதிகள் கோரிக்கை-

jail-002தைப்பொங்கல் பண்டிகையைப் புறக்கணித்து தமது விடுதலைக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று புதிதாக மூன்று கைதிகள் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக பங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை சமர்ப்பிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளை இம்மாதம் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒக்டோபர் 12ம் திகதி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாக்குறுதி காரணமாக உண்ணாவிரதத்தை கைவிட்ட கைதிகள் மீண்டும் நவம்பர் 9ஆம் திகதி உண்ணாவிரத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் நவம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 39 கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. மேலும் சில கைதிகளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தது. எவ்வாறாயினும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.