பிரித்தானிய முன்னாள் பிரதமர் இரா. சம்பந்தன் சந்திப்பு-

sampanthan Doniஇலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயருக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, தமிழர்களின் வாழ்விடங்களில் அவர்களை மீளகுடியேற்றுதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிற்கமைய பொருளாதார மாநாடொன்றில் உரையாற்றுவதற்கு டொனி பிளேயர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வில் வெடிபொருள் மீட்பு-

mannarமன்னார் பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்று மீட்டுள்ளது. தோட்டச் செய்கைகாக குறித்த காணியில் உள்ள மேட்டு நிலப்பகுதியை உழவு இயந்திரத்தினால் உழுது கொண்டிருந்த போது புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி பொருள் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில், உடனடியாக மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெடிபொருளை மீட்டனர். மீட்கப்பட்ட வெடி பொருள் சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்டது எனவும், மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்-

avangardபாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கே அவரை அழைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்றைய தினமும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 6 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.